மற்றவை

வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்: ஜெ.க்கு பிரேமலதா எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வீணாகப் பேசி வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் தேமுதிக வேட்பா ளர் சிவமுத்துகுமாரை ஆதரித்து கொட்டாம்பட்டியில் பிரேமலதா ஞாயிற்றுக்கிழமை பேசியது:

இங்கே மந்திரியாக இருப்பவர் செல்லூர் ராஜு. ஆனால் அவர் செல்லரிச்ச ராஜுவாக இருக்கிறார். தொகுதிக்கும், மக்களுக்கும் எதையுமே செய்யவில்லை. மக்களை ஏமாற்றிவரும் அதிமுக, திமுகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

இது முக்கியமான தேர்தல். 5 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. அதை சிதறாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த கூட்டணியின் சார்பில் மோடி பிரதமராவது உறுதியாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் ‘எக்ஸ்பிரஸ்’ செங்கோட்டை போய் சேராது. வழியிலேயே ஒவ்வொரு பெட்டியாக கழன்று விழுந்துவிடும்.

சென்னையில் முதல்வர் பிரச்சாரம் செய்தபோது, அதிக அளவில் பிரச்சாரத்தை ரத்து செய்தவர் என தேமுதிக தலைவர் விஜயகாந்தை மறைமுகமாகப் பேசியுள்ளார். அதற்கு ரமணா பாணியில் புள்ளி விவரத்துடன் பதிலளிக்க நாங்கள் தயராக உள்ளோம். மார்ச் 3-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா இதுவரை 18 நாள் ஓய்வு எடுத்துள்ளார். ஆனால் மார்ச் 16-ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த் இதுவரை 39 தொகுதிகளிலும் 2 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். 60 மணி நேரம் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார். இதன்மூலம் பிரச்சாரத்தில் அதிக நேரம் பேசிய தலைவரும் அவர்தான். பிரச்சாரத்தின்போது வேன் பழுதானதால் 2 நாளும், தொண்டையில் புண் வந்ததால் ஒரு நாளும் என 3 நாள் மட்டுமே ஓய்வு எடுத்துள்ளார்.

பறந்து பறந்து சென்று, எழுதிக் கொடுத்ததை வாசித்து பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, பிரச்சாரம் தொடங்கிய 48 நாளில் 18 நாள் ஓய்வு எடுத்துள்ளார். வீணாகப் பேசி விஜயகாந்திடமும், தேமுதிகவிடமும் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.

கொடநாட்டில் தங்கி, ஓய் வுக்கே ஓய்வு கொடுக்கும் ஜெயலலிதாவுக்கு விஜயகாந் தைப் பற்றி பேசத் தகுதி இல்லை. அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும். தொடர்ந்து பேசினால் ரமணா பாணியில் இன்னும் நிறைய புள்ளிவிவரங்களை தெரி விப்போம் என எச்சரிக்கை செய்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT