காங்கிரஸ், பாஜக வெற்றி பெறும் தொகுதிகளைக் கூட்டினால்கூட மத்தியில் ஆட்சியமைக்கத் தேவை யான 273 இடங்கள் என்ற பெரும் பான்மை பலத்தை எட்ட முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் அல்லாத புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலை மையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நம்பகத் தன்மையை இழந்து விட்டது. ஊழல்மயமான ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க முடியாது. அதேநேரம் பாஜக தலைமையிலான மதவாத அரசுக்கும் ஆதரவு அளிக்க முடியாது.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகள் தனித்தனியே கைப்பற்றும் இடங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் கூட, ஆட்சியமைக்கத் தேவையான 273 இடங்களைப் பெற முடியாது.
மத்தியில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் அல்லாத புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும். நான் மட்டும்தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்ற கூறமுடியாது. நாட்டின் பல் வேறு சிறந்த தலைவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலுக்குப் பிறகுதான் புதிய கூட்டணி அமையும் என்றார் மம்தா பானர்ஜி.