விஜயா - நிர்வாகி, விருட்சம் அமைப்பு.
கோடைக்காலம் வரும் முன்பே விருதுநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்துவிட்டது. பொதுவாக, 10 நாட்களுக்கு ஒருமுறைதான் இங்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் கேன் தண்ணீரை வாங்க மாதாந்திர பட்ஜெட்டில் கணிசமான தொகையைச் செலவிடுகின்றனர்.
டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்படும் தண்ணீருக்காகப் பொதுமக்கள் அடித்துக்கொள்கின்றனர். குடிநீர்த் திட்டங்களுக்கான எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாகப் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், குடிநீர் ஆதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விருதுநகர் மாவட்டம் குடிநீர்த் தட்டுப்பாட்டிலிருந்து மீள முடியும். ஆனால், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதனைச் செயல்படுத்த முனைப்புக் காட்டுவதில்லை.