வகுப்புவாதத்தை தூண்டிவிட்டது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் (வி.எச்.பி.) தலைவர் பிரவீண் தொகாடியா மீது பாவ்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், பாவ்நகரில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.எச்.பி., பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். இப்போராட் டத்தில் பங்கேற்ற வி.எச்.பி.யின் தலைவர் பிரவீண் தொகாடியா, இந்துக்கள் வசிக்கும் பகுதியில் முஸ்லிம்கள் சொத்து வாங்குவதை அனுமதிக்கக் கூடாது. அதையும் மீறி அவர்கள் சொத்துகளை வாங்கினால், அதை பலவந்தப்படுத்தி கையகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
அவரின் இப்பேச்சுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பிரவீண் தொகாடியா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தினரிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவர் மீது எடுக்கப்பட்டுள்ள நட வடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படியும் ஆணையம் கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து பாவ்நகர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பி.கே.சோலங்கியின் உத்தரவின் பேரில் பிரவீண் தொகாடியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பி.கே. சோலங்கி கூறியதாவது: “பிரவீண் தொகாடியா மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 (ஏ) (மத ரீதியான மோதலை ஏற்படுத்துதல், கலவரத்தைத் தூண்டுதல்), 153 (பி) (மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி இந்திய குடி மக்களுக்கான உரிமையை கிடைக்கவிடாமல் தடுத்தல்), 188 (தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் அறிவுறுத்தல்களை மீறி நடந்து கொள்ளுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தொகாடியா மறுப்பு
இதற்கிடையே, முஸ்லிம் களுக்கு எதிராக கருத்து எதை யும் தான் தெரிவிக்கவில்லை என்று பிரவீண் தொகாடியா மறுத் துள்ளார். “இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை, தீய நோக்க முடையவை, விஷமத்த னமானவை. சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உள்ளேன்” என்று பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஆய்வு
இதற்கிடையே பாவ் நகரில் பிரவீண் தொகாடியா பேசிய உரையின் வீடியோ பதிவை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறையை மீறும் வகையில் அவர் பேசியருந்தால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.