தான் திருமணமானவர் என்பதை மறைத்தவரா பெண்களின் கவுரவம் பற்றி பேசுவது என கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.
எத்தனையோ தேர்தல் களுக்குப் பிறகே, தான் திருமணமானவர் என்பதை ஒப்புக்கொண்டு தனது மனைவி பெயரை வேட்பு மனு தொடர்பான ஆவணத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இது ஏன் என்றார் ராகுல் காந்தி.
தோடா பகுதியில் வெள்ளிக் கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாஜக உரக்க குரல் கொடுக்கிறது. ஆனால் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எத்தனையோ தேர்தல்களில் போட்டியிட்டும் அதிலெல்லாம் தெரிவிக்காமல் இப்போதுதான் முதல்முறையாக தான் திருமணமானவர் என்ற உண்மையை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
டெல்லியில் பேசும்போது பெண்கள் கவுரவம் பற்றி அவர் பேசத் தவறுவது இல்லை. அப்படிப் பேசும் அவர் தனது மனைவியின் பெயரை வேட்புமனு தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டதில்லை.
கர்நாடக பாஜக மீது தாக்கு
கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தபோது பாஜக அமைச் சர்கள் சட்டப் பேரவையிலேயே வீடியோ பார்த்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்த வீடியோக்கள் என்ன ரகமானவை என்பதை நீங்களே பத்திரிகைகளில் படித்து தெரிந்திருப்பீர்கள்.
பாஜக முதல்வர் ரமண் சிங் ஆளும் சத்தீஸ்கரில் பெண்கள் நிலை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் சத்தீஸ்கர் போனபோது அங்கு 20 ஆயிரம் பெண்களைக் காணவில்லை என என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. காணா மல் போய் விட்டார்களாம் என்றார் ராகுல் காந்தி.
உள்ளே, வெளியே
குஜராத் தொழிலதிபர் அதானிக்கு எல்லாவற்றையும் தாராளமாக வழங்குகிறார் நரேந் திர மோடி. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத் வானி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட் டோரை வெளியேற்றி விட்டார்.
குஜராத்தில் நடப்பது அதானி அரசு. அதானி குழுமத்துக்கும் மோடிக்கும் நல்ல நெருக்கம் இருக்கிறது. அதானி குஜராத்தின் மிகப்பெரிய தொழிலதிபர். அவருக்கு எல்லாமே தடையின்றி வழங்கப்படுகிறது. இப்படித்தான் மோடி அரசு குஜராத்தில் செயல் படுகிறது என்று குற்றம்சாட்டினார் ராகுல்.
தோடா நகரில் நடந்த பிரச் சாரக் கூட்டத்தில் மத்திய அமைச் சரும் காங்கிரஸ் வேட்பாளருமான குலாம் நபி ஆசாதுக்கு ஆதரவு திரட்டினார் ராகுல்.
தான் திருமணமானவர் என்ற தகவலை வேட்பு மனு தாக்கலின்போது கொடுத்த ஆவணங்களில் முதல்முறையாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வதோதரா மக்களவைத் தொகுதி யில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோது கொடுத்த ஆவணத்தில் தனது மனைவி பெயர் யசோதா பென் என குறிப்பிட்டுள்ளார் மோடி. முந்தைய தேர்தல்களில் மனைவி பெயர் தொடர்பான பத்தியை நிரப்பாமல் காலியாக விட்டுவிடுவது அவரது வழக்கம். 2012ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆவணத்தில் தனது மனைவி பெயரை நிரப்பாமல் காலியாக விட்டுவிட்டார் மோடி.