மகாராஷ்டிராவில் கடந்த 2009 சட்டமன்ற தேர்தலின் போது சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஒப்புக்கொண்டார் என மக்களவை முன்னாள் சபாநாயகர் மனோகர் ஜோஷி கூறியுள்ளது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கேட்டுக் கொண்டதற்கு இணங்க கூட்டணி குறித்து தான் சரத்பவாரிடம் பேசியதாகவும், முதலில் கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட பவார் பின்னர் பின்வாங்க காரணம் என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மறுப்பு: இந்நிலையில், மனோகர் ஜோஷி கூறியுள்ளதை திட்டவட்டமாக மறுத்துள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சி. அக்கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில்: மனோகர் ஜோஷிக்கு தற்போது சிவசேனாவில் இடமில்லை. கட்சி அவருக்கு மக்களவை தேர்தலிலோ, மாநிலங்களவை தேர்தலிலோ சீட் தரவில்லை. எனவே விரக்தியில் இருக்கும் அவர், கட்சிக்குள் நற்பெயர் சம்பாதித்து மீண்டும் சிவசேனாவில் இடம் பிடிக்க அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இவ்வாறு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே, கோபிநாத் முண்டே ஆகியோர் பவார் சிவ சேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாக கூறியிருந்த நிலையில் தற்போது மனோகர் ஜோஷியும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.