மற்றவை

தருமபுரியில் வெற்றி மாலை யாருக்கு?

செய்திப்பிரிவு

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பல்வேறு சாதக, பாதக அம்சங்கள் உள்ளதால் வெற்றி மாலையை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

அதிமுக வேட்பாளர் பி.எஸ்.மோகன் மாவட்ட மக்களுக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாதவர். கூட்டணி பலமும் குறைவு. தேர்தல் நேரத்தில் மின் வெட்டுப் பிரச்சினை ஆளுங்கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது ஆகியவை பாதக சூழல்கள். எனினும், அதிமுக அரசால் தருமபுரியில் நான்கு அரசுக் கல்லூரிகள், மடிக்கணினி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள், முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரம் ஆகியவை பாதகமான அம்சங்களாக உள்ளன.

திமுக வேட்பாளர் தாமரைச்செல்வனுக்கு, உள்கட்சிப் பூசல் பெரிய சிக்கலாக உள்ளது. மேலும், திமுக தலைமையில் நடக்கும் குடும்பச் சண்டையும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தற்போது எம்.பி.யாக உள்ளதாலும், மக்களின் அதிருப்தி இல்லை, எளிதாக அணுகும் தன்மை, பல திட்டங்கள், கூட்டணி பலமும் அவருக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன.

பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், வெளியூரைச் சேர்ந்தவர். தருமபுரி கலவரத்தால் தலித் வாக்குகள் கிடைப்பது சிரமம். எனினும், வன்னியர்

வாக்கு வங்கி, கூட்டணிக் கட்சிகளின் பலம், ஓராண்டு பிரச்சாரம், மோடி மீதான எதிர்பார்ப்பு ஆகியவை சாகதச் சூழலை ஏற்படுத்தும்.

காங்கிரஸ் வேட்பாளர் ராம.சுகந்தன் வெளியூரைச் சேர்ந்தவர். காங்கிரஸுக்கு தனிப்பட்ட வாக்கு வங்கி இல்லாததும், மத்திய காங். ஆட்சியின் மீதான வெறுப்பும் பாதகமாகும். முன்னாள் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் என்பதும், அவர் காலத்தில் செய்த நலத் திட்டங்களும் வாக்காக மாறலாம்.

முக்கிய வேட்பாளர்கள் இதுபோன்ற பல சாதக, பாதகங்களுடன் களத்தில் உள்ளதால், யார் வெற்றி மாலையை சூடுவது என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT