மற்றவை

நாமக்கல் தொகுதியில் வாகை சூடுவது யார்?

செய்திப்பிரிவு

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வாகையை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, தொகுதி மறு சீரமைப்பின் போது உதயமானது. இதில், நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் (தனி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டத்திற்கு உள்பட்ட சங்ககிரி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக மாவட்டச் செயலர் செ.காந்திச்செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் பி.ஆர்.சுந்தரம், திமுக சார்பில் செ.காந்திச்செல்வன், தேமுதிக சார்பில் எஸ்.கே.வேல், காங்கிரஸ் சார்பில் ஜி.ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம், வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், திமுக, தேமுதிக, காங்கிரஸ் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தேமுதிக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்ட மகேஸ்வரன், உடல்நலக் குறைவால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். பின்னர், தேமுதிக-விலிருந்து விலகி, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அதிமுக-வில் இணைந்தார். பின்னர், எஸ்.கே.வேல் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அனைத்து முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பலர், தங்களது வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தனர். அதிமுக வேட்பாளரை ஆதிரித்து முதல்வர் ஜெயலலிதா நாமக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் ஆணையம் மீது வழக்குத் தொடுக்கப்படும் என அவர் பேசியது, நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின், தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கே.வி.தங்கபாலு ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முக்கியத் தலைவர்களின் பிரச்சாரத்தால் நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்தது.

ஒவ்வொரு வேட்பாளரும், பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்தனர். நாமக்கல் தொகுதியில் வென்று, வெற்றி மாலையை சூடப்போவது யார் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT