எஸ். நயினார் குலசேகரன் - தலைவர், தூத்துக்குடி மாவட்டத் தாமிரபரணி நதிநீர்ப் பாதுகாப்புப் பேரவை.
தூத்துக்குடி தொகுதியின் உயிர்நாடி, தாமிரபரணி நதி. இந்த நதியை நம்பி 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மாவட்டம் முழுமைக்கும் குடிநீர் ஆதாரமும் இந்த நதிதான்.
முறையான நீர் நிர்வாகம் இல்லாத காரணத்தாலும், தொழிற்சாலைகளுக்கு அதிகம் தண்ணீர் எடுக்கப்படுவதாலும் தாமிரபரணி பாசனப் பரப்பு ஆண்டுதோறும் சுருங்கிவருகிறது. மூன்று போகம் விளைச்சல் கண்ட இந்தப் பகுதியில், தற்போது ஒரு போகம் விவசாயமே கேள்விக்குறியாக உள்ளது.
தாமிரபரணி பாசனத்தின் கடைசி அணைக்கட்டு திருவைகுண்டம் அணை. 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தூர்வாரப்படாததால் அணையில் வண்டல் குவிந்துவிட்டது. 8 அடி கொள்ளளவு கொண்ட அணையில், தற்போது ஒரு அடிகூடத் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியவில்லை. தாமிரபரணி பாசனத்தில் உள்ள 53 குளங்களும் நீண்ட காலமாகத் தூர்வாரப்படாததால், குளங்களின் தண்ணீர் கொள்ளவு சுருங்கிவிட்டது.
தாமிரபரணி பாசனத்தைப் பாதுகாக்க முறையான நீர் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். திருவைகுண்டம் அணை மற்றும் 53 பாசனக் குளங்களைத் தூர்வார வேண்டும். தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.