மற்றவை

தருமபுரியில் அதிமுக கூட்டத்துக்கு ஆள் திரட்ட பணம்: பிரவீண்குமாரிடம் பாமக மனு

செய்திப்பிரிவு

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவதற்காக அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் பாமக குழு புகார் மனு அளித்துள்ளது.

அந்த மனுவில், "கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிகளில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி - பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகில் பல கோடி ரூபாய் செலவில் மேடை மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பொதுக்கூட்டத்திற்கு மக்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சிற்றுந்துகள் மற்றும் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சொந்தமான வாகனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த வாகனங்கள் அனைத்துமே போக்குவரத்து, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்படவை ஆகும். பல ஊர்களிலிருந்து அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினரால் மிரட்டி வரவழைக்கப்பட்ட வாகனங்களில் தான் மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு வேட்டி அல்லது சேலைகள், பிரியாணி பொட்டலம், ரூ.300 பணம் மற்றும் அ.தி.மு.க. கரை பதிக்கப்பட்ட துண்டுகள், தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதற்காக குண்டல்பட்டி என்ற இடத்தில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் லாரி லாரியாக வேட்டிகளும், சேலைகளும் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

கரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கும்பரஹள்ளி என்ற ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் பணி அட்டைகள் அனைத்தையும் பறித்து வைத்துக் கொண்ட ஊராட்சித் தலைவர், அனைத்து பெண்களும் தருமபுரி பொதுக்கூட்டத்திற்கு வந்தால் மட்டுமே அவை திரும்பத் தரப்படும் என்று மிரட்டியிருக்கிறார்.

பல இடங்களில் ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இன்று ஒருநாள் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுகிறது.

இதேபோல் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலும் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வகையான விதிமீறல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும் விதிமீறல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை

இவை அனைத்துமே தெளிவான தேர்தல் நடத்தை விதி மீறல்கள் ஆகும். தேர்தலில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை இது சிதைத்து விடும். எனவே, இந்த விதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதி மீறலுக்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விதிமீறல்கள் அனைத்தும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சாதகமாக மேற்கொள்ளப்பட்டவை என்பதால், மேடை, அலங்கார வளைவுகள் உள்ளிட்ட அனைத்துக்குமான செலவுகளை வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த மனுவில் பாமக கூறியுள்ளது.

SCROLL FOR NEXT