திருவண்ணாமலை கிரிவல பாதையில் வசித்து வரும் சாதுக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் 100-க்கும் மேற்பட்ட சாதுக்கள் வசித்து வருகின்றனர். தர்ம சத்திரம் மற்றும் அரசு கட்டிக் கொடுத்த தங்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை.
வட மாநிலங்களில் உள்ளது போல, தமிழகத்தில் உள்ள சாதுக்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சாதுக்களுக்கு வெற்றி கிடைத்தது. அப்படியிருந் தும், சாதுக்களுக்கு வாக்குரிமை என்பது எட்டாக் கனியாக இருந்தது.
திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவல பாதையில் வசித்து வரும் சாதுக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி தி.மலை ஆட்சியர்களிடம் ஓம் ஆத்மலிங் கேஸ்வரர் அறக்கட்டளை நிறுவனர் மோகன்சாது மனு கொடுத்தார். அதன்படி, நடவடிக்கை எடுக்கப் பட்டது. வாக்குரிமை கேட்டு தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில், சாதுக்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுமார் 350 சாதுக்கள் கடந்த ஜனவரி 27ம் தேதி விண்ணப்பம் அளித்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சாதுக்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சாதுக்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற் றது. கிரிவல பாதையில் உள்ள ரமண ஆசிரமம், திருநேர் அண்ணாமலை கோயிலில் பட்டியல் சரிபார்ப்பு பணி, மோகன்சாது தலைமையில் நடைபெற்றது. அதில், பெயர், வசிப்பிடம், புகைப்படம் ஆகியவை சரியாக இடம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்கப்பட்டது.
சாதுக்கள் கூறுகையில், “குடும்பத்துடன் வசித்தபோது ஓட்டு போட்ட நினைவு உள்ளது. குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு வாக்குரிமை என்பது எங்க ளுக்கு இல்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு வாக்களிக்க உள்ளோம். முதன்முறையாக பலர் வாக்களிக்க உள்ளனர்” என்றனர். மோகன்சாது கூறுகையில், “சாதுக்கள் வாக் களிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக பூத் சிலிப் மூலமாக சாதுக்கள் வாக்களிக்கலாம்” என்றார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோயிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட சாதுக்கள்.