மற்றவை

கார்த்தி சிதம்பரம் மீதான புகார்: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மறுப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரி கொடுத்த மனுவில் துளியும் உண்மையில்லை என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவஸ்தவா, சிவகங்கை தொகுதி தேர்தல் அதிகாரியை சந்தித்து, திங்கள்கிழமை மனு ஒன்றை அளித்தார். அதில், ‘சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், தனது வேட்புமனுவில் சொத்துக் கணக்கு விவரங்கள் சிலவற்றை மறைத்து விட்டார்’ என்று கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீவஸ்தவா என்ற அரசு அதிகாரி அளித்த மனுவில் துளியும் உண்மையில்லை. அவர் பல வழக்குகளைத் தொடர்பவர். அவர் மீது வருமான வரித்துறை, இலாகாபூர்வ நடவடிக்கை எடுத்துள்ளது. இதே புகார்களைக் கொண்ட மனுவை, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், இந்த மனு விஷமத்தனமானது, அபத்தமானது என்று கண்டித்து, மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது என்று அறிகிறேன். அந்தத் தீர்ப்பை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் என்றும் அறிகிறேன். இவ்வாறு அறிக்கையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT