மற்றவை

வேட்பாளர்கள் ஏப். 24-க்குள் 3 முறை செலவுக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: பிரவீண்குமார் தகவல்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் 3 முறை தங்களது செலவுக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணும் மையத்துக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி உள்பட யாரும் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. அந்தத் தொகுதியின் மத்திய பார்வையாளர் மட்டுமே செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார். மற் றவர்கள், செல்போனை வெளியில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் சமக தலைவர் சரத்குமார், நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இல்லை என்று ஒருவர் கொடுத்த புகார் பற்றி கேட்கிறீர்கள். ஒரு கட்சியைச் சேர்ந்த பிரபலம், வேறு கட்சி வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தால் அதற்கான செலவு முழுவதும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் தான் சேர்க்கப்படும்.

இன்று ஆலோசனை

வேட்பாளர்கள் தங்கள் செலவுக் கணக்கை தேர்தல் நடக்கும் நாளுக்கு முன்பாக 3 முறை தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தாக்கல் செய்வதற்கான இடைவெளி 3 நாட்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இதுதொடர்பாக அந்தந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செலவுக்கணக்குப் பார்வையாளர் ஆகியோர் வேட்பாளர்களுடன் வியாழக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்துகின்றனர்.

ஒவ்வொரு முறையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் செலவுக் கணக்குகளை, மாவட்ட தேர்தல் இணையதளத்திலோ அல்லது தேர்தல் துறை அலுவலகத்தின் இணையதளததிலோ பார்க்கலாம்.

SCROLL FOR NEXT