தமிழகம், புதுச்சேரியில் 18 தொகுதிகளில் இடதுசாரி வேட்பாளர்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பார்கள் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் து.ராஜா.
திருவாரூரில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் மக்கள் விரோதமானது. இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபட்டு, இயற்கை வளமும், செல்வமும் சுரண்டப்பட்டு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறும் நிலையும், வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சமூக ரீதியான பதற்றம் ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கொள்கை மாற்றம் ஒன்றே இதற்குத் தீர்வாகும்.
சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊழலும் கொள்ளையும் அதிகரித்துவிட்டன. இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி அகற்றப்பட வேண்டிய ஒன்றாகிவிட்டது. ஊழல் மலிந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கும், மதவாத பாஜகவுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
நரேந்திர மோடியின் மாயாஜாலத்தை நம்பி தமிழகத்தில் பல கட்சிகள் பாஜகவுடன் அணி சேர்ந்துள்ளன . திமுகவும் அதிமுகவும் மோடியின் மதவாதக் கொள்கை குறித்து பகிரங்கமாக விமர்சனம் செய்ய மறுக்கின்றன.
மீனவர்களுக்கு தனி ஆணையம் என்ற இடதுசாரிகளின் நீண்ட கால கோரிக்கையையே தற்போது தனது வாக்குறுதியாக பாஜக முன்வைக்கிறது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் காங்கிரஸ், பாஜக ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளன. மாற்றுக் கொள்கை கொண்ட அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே இடதுசாரிகளின் நோக்கம் என்றார் ராஜா.