மற்றவை

திருமணத்தை மறைத்த மோடிக்கு பிரதமராக தகுதி இல்லை: கருணாநிதி பேச்சு

செய்திப்பிரிவு

"நரேந்திர மோடி தனக்கு திருமணமானதை இதுவரையில் சொல்லாமல் மறைத்தார் என்றால், இவர் பிரதமராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது" என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: "சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தோழமைக்கட்சிகளின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து வாக்கு கேட்க வந்திருக்கிறேன். கணையாழி சின்னம், அவருடைய கட்சிக்குக் கிடைத்திருக்கிறது என்ற செய்தியை கேள்விப்பட்டேன்.

மோதிரம் சின்னம் கிடைத்திருப்பது ஒரு நல்ல அடையாளம். தேர்தல் வெற்றி நிச்சயம் என்பதை மாத்திரம் குறிப்பது அல்ல, திருமாவளவனுக்கு விரைவில் திருமணமும் நிச்சயம் என்பதற்கு அடையாளம்தான் இந்த மோதிரம் சின்னம்.

விரைவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவனுக்கு உங்களுடைய ஆதரவை அவருக்கு கணையாழி சின்னத்தின் மூலம் வழங்கி வெற்றி பெறச் செய்தால் அவர் திருமணத்திற்குச் சம்மதித்து அதை ஏற்றுக் கொண்டால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அதை விட அதிகமான மகிழ்ச்சி நீங்கள் அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்தால் எனக்கு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனக்கு முன்னால் பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல், இந்தியாவினுடைய பிரதமராக போட்டிக் களத்திலே நிற்பவராக நரேந்திர மோடி விளங்குகிறார். அவரை வெற்றி பெறச் செய்வதற்கு முன்பு வெற்றி பெறச் செய்யலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கு முன்பு அவரைப் பற்றிய சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் திராவிட இயக்கத்திற்கு வேண்டியவர் என்று சொல்லமாட்டேன். திராவிட இயக்கத்திற்கு அவரும் அவரைச் சார்ந்த கட்சிக்காரர்களும் என்றைக்குமே வேண்டியவர்கள் அல்ல. தி.மு.க., திராவிடர் இயக்கம் என்ற இந்த இயக்கத்தினுடைய வெற்றிகளை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்வேன்.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆக்கமும் ஊக்கமும் இருக்கின்ற வரையில் எங்கள் அலையைத் தாண்டி வேறு யாரும் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணாதீர்கள். காரணம் நாங்கள் மதச்சார்பற்ற கொள்கைகளிலே அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்கள்.

நாங்கள் தமிழகத்திலும் சரி, இந்தியாவிலே உள்ள பல பகுதிகளிலும் சரி மதக் கொள்கைக்கு, மதச் சார்பான கொள்கைக்கு அணுஅளவும் இடம் தரமாட்டோம். நாங்கள் அதை அனுபவத்திலே உணர்ந்து சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இந்தத் தேர்தலிலே எவ்வளவு வேகமாக, கடுமையாக ஈடுபட்ட வருகிறது, எங்கள் இயக்கத் தோழர்கள், எங்களுடைய வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று சுற்றிச்சுழன்று பணியற்றி வருகின்றோமே என்ன காரணம்? எங்களிலே சில பேர் எம்.பி.க்களாக வேண்டும். அதிகாரத்திற்கு வரவேண்டும், மத்தியிலே அமைச்சராக வேண்டும் என்பதற்காக அல்ல.

நாங்கள் இந்தத் தேர்தலிலே ஈடுபட்டு, இம்மியளவும் வேறு எந்தக் கட்சிக்கும் இடம் தரமாட்டோம் என்று சொல்லி பாடுபடுவதற்குக் காரணம், எந்தக் கட்சி வந்தாலும் வரட்டும், ஆனால் மதவாதத்திற்கு முட்டு கொடுக்கிற மதச்சார்புள்ள எந்தவொரு கட்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை எடுத்துக்காட்டத்தான்.

ஆனால் இன்று நான் பத்திரிகையிலே படித்தேன். எத்தனையோ பேர் தமிழ்நாட்டிலே உள்ள தலைவர்களும் சரி, இந்தியாவிலே உள்ள தலைவர்களும் சரி, நான்தான் பிரதமர், நான்தான் பிரதமர் என்று மார் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான்தான் பிரதமர் என்று சொல்லுகிறவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் யாரும் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புபவர்கள் அல்ல. எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல நாங்கள் பிரதமர்களை உருவாக்குவோமே தவிர, நாங்கள் பிரதமராக வரவேண்டும் என்று விரும்புபவர்கள் அல்ல. அப்படி உருவாக்கப்பட்ட பிரதமர்கள் யார் யாரென்று நாட்டிற்கு நன்றாகத் தெரியும். அரசியலைப் புரிந்தவர்களுக்கு மிகத் தெளிவாகப் புரியும். சோனியா காந்தி பிரதமராக வரவேண்டும் என்று நான் பாடுபட்டேன்.

அதை எனக்கு முன்னால் பேசியவர்கள் இங்கே சொன்னார்கள். அவர்கள் பிரதமராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் நாங்களும் பாடுபட்டபோது என்ன சொன்னார்கள், அந்த அம்மையார் இந்தியரே அல்ல. அவர்கள் இந்தியாவினுடைய பிரதமராக வர தகுதியற்றவர்கள் என்றார்கள். நான் அப்போது அவர்களுக்கு சொன்ன பதில், அவர் எப்படி இந்தியராக இல்லை என்று நீங்கள் சொல்ல முடியும். ராஜீவ் காந்தி இந்தியர்தானே.

அவருடைய துணைவியார் சோனியா காந்தி இந்தியர் என்ற முறையிலே காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக வரவும், கூடுமானால் இந்தியாவின் பிரதமராக வரவும் எல்லா வகையிலும் பொருத்தமானவர்தான் என்று அன்றைக்கு ஓங்கி அடித்துச் சொன்னது இந்தக் கருணாநிதிதான் என்பதை உங்களுக்கு எல்லாம் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஆனால், அதற்குப் பிறகும் இன்றைக்கு இந்தியாவிலே ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களால், பல்வேறு பிரச்சினைகளால் அடுத்த பிரதமராக வரப்போகிறவர் யார் என்ற கேள்விக்குறிக்கு விடை காண அரசியல் அறிஞர்கள், மேதைகள் எல்லாம் இன்றைக்கு சிந்தனை செய்து கொண்டிருக்கும்போது இந்தத் தேர்தல் வந்து விட்டது.

இந்தத் தேர்தலிலே நாம் மீண்டும் யாரை தேர்ந்தெடுப்பது என்ற அந்தக் கேள்விக்கு விடைகாணத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நீங்களும் வந்திருக்கின்றீர்கள். நாம் எல்லோரும் கூடி எடுக்க வேண்டிய முடிவுதான் அடுத்த பிரதமராக யார் வருவது என்ற முடிவாகும். நரேந்திர மோடி சுத்த சுய பிரகாசம்; அவரிடத்திலே எந்தவிதமான அப்பழுக்கும் இல்லை.

அவர் எதையும் மறைக்க மாட்டார். எல்லாவற்றையும் திறந்து வைத்ததைப் போலத்தான் சொல்வார் என்று நேற்று வரையிலே சொன்னார்கள். இன்றைக்கு மாலை பத்திரிகையிலே பார்த்தால், அவருக்கு ஒரு துணைவியார் இருக்கிறார் என்ற செய்தியைக் கூட சில நாள் நரேந்திர மோடி நாட்டிற்குச் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறார்.

நான் தேர்தலுக்காக விண்ணப்பித்த விண்ணப்ப மனுவில் அதைக் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமல் விட்டு விட்டேன் என்று சொல்லியிருக்கிறார். 'நாமினேஷன்' பேப்பரில் தேர்தலுக்காக செய்கின்ற விண்ணப்பத்தில் குடும்பத்தாருடைய பெயரை எல்லாம் சொல்ல வேண்டியதுதான் அவசியம்.

நான் அப்படி செய்யத் தவறினால் மனைவியினுடைய பெயரையோ, மகளுடைய பெயரையோ குறிப்பிடத் தவறினால், அது தேர்தல் கமிஷன் - தேர்தல் ஆணையத்தின்படி குற்றம். அதற்கு வேறு பரிகாரம் எதுவும் இதுவரையிலே காணப்படவில்லை.

ஆனால், நரேந்திர மோடி தனக்கு திருமணமானதை இதுவரையில் சொல்லாமல் மறைத்தார் என்றால், இவர் பிரதமராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவேளை சிதம்பரம் பொதுக்கூட்டத்திலே நான் இதை வெளியிட்ட பிறகு நாளைய தினம் அதை அவர்கள் சொல்லலாம்.

எனக்கு ஒரு மனைவி இருப்பது உண்மைதான். அதை நான் மறந்து போய் விட்டுவிட்டேன் என்று சொன்னால், மனைவியையே மறந்து விட்டாரா என்று கேலிச் சிரிப்பு எழும். எப்படி இந்தத் தேர்தலிலே அவர் போட்டியிடப்போகிறார் என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய விவகாரம். எனவே நான் அதை தேர்தல் ஆணையத்திற்கு விட்டுவிடுகிறேன் அவர்கள் முடிவு செய்யட்டும்; எப்படி முடிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

இந்த பிரச்சினையை கிளப்பியர் கருணாநிதி சாதாரண ஆளல்ல, ஏதோ நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டவேண்டும் என்பதற்காக இந்த குற்றத்தைச் சொல்லவில்லை; உலகத்திற்கு, இந்திய நாட்டு மக்களுக்கு ஒரு ரகசிய செய்தியைச் சொன்னேன் அவ்வளவுதான். எப்படி இவர் மனைவி இருப்பதைக் கூடச் சொல்லாமல்; அவருடைய பெயரால் இவ்வளவு சொத்து இருக்கிறது என்பதைக் கூட சொல்லாமல், அதை பரம ரகசியமாக வைத்திருக்கிறார் என்றால் நாளைக்கு இந்த நாட்டு மக்களுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா? அப்படி பதில் சொல்லுகின்ற நேரத்திலே அந்த பதிலை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாதா என்பதை விரைவிலே தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை அறிவிக்காவிட்டால் மனைவி இருந்தபோது அதை மறைக்கின்ற நம்முடைய நரேந்திர மோடி, நாளைக்கு இன்னும் எதை மறைக்க மாட்டார்? என்றெல்லாம் கேள்வி எழுந்தால் நாடு என்ன ஆகும்? நாட்டிலே ஆட்சி எப்படி நடைபெறும்? என்பதை தயவு செய்து இதுவரையிலே நரேந்திர மோடி பற்றி அவர் நல்லவர், வல்லவர் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சிந்தித்துப் பார்த்ததற்குப் பிறகு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

மோடி மனைவி இருப்பதை மறைத்துவிட்டார் என்பதற்கு மாத்திரமல்ல; அவர் எதையெல்லாம் மறைக்காமல் இன்றைக்கு நடைபோட்டு வருகிறார் என்பதற்கு உதாரணம் அவரும், அவருடைய கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம் என்கிறார்கள்.

ராமர் கோவில் கட்டுவோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவிலே மதக் கலவரத்தை உண்டுபண்ண என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்ற அந்த முறையிலேயே தான் நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம் என்று இப்போதே அதை தொடங்கி வைக்கிறார்கள்.

தயவு செய்து உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன் ராமர் எங்களுக்கொன்றும் விரோதி அல்ல; தனிப்பட்ட விரோதம் எனக்கும் ராமனுக்கும் கிடையாது. ஆனால் ராமர் கோயில் கட்டினால் அதற்காக பாபர் மசூதியை இடித்தால் அப்படி இடிப்பதற்கு ஜெயலலிதா போன்றவர்கள் ஆதரவு கொடுத்தால் ஏற்கனவே கொடுத்ததை போல, கரசேவைக்கு ஆதரவு கொடுத்தார்களே அந்த அம்மையார் அதைப்போல ஆதரவு கொடுத்தால் நாடு என்ன ஆகும் என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள்.

எங்களுக்கு ராமரோ, கிருஷ்ணரோ யாரும் தனிப்பட்ட முறையிலே எதிரிகள் அல்ல; விரோதிகள் அல்ல. ஆனால் அந்தக் கடவுள்களின் பெயரால் நாட்டிலே உள்ள சாதாரண மக்களை மதத்தின் பெயரால், மதக் குழப்பங்களை ஏற்படுத்துவதன் பெயரால் கலவரங்களை, அராஜகங்களை ஏற்படுத்துவதை இங்கே வீற்றிருக்கிற தோழமைக் கட்சிகளின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதை நாங்கள் அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவே முடியாது; நிச்சயமாக அனுமதிக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்றார் கருணாநிதி.

SCROLL FOR NEXT