மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் போது காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்குவது தொடர்பாக முடிவு செய்வோம் என்று அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த கருத்து பாஜகவினுடை யதுதானே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடையது அல்ல என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப்பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அயோத்தியில் சட்டத் துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்கரி கூறியதாவது: “சாதி, மதம் பற்றி பேசி, சமூகத்தில் விஷ எண்ணங்களை காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பரப்பி வருகின்றன. இவை அனைத்தும் 100 சதவீதம் வகுப்புவாதக் கட்சி களாக உள்ளன.
காஷ்மீரின் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சயீத் அகமது கிலானி, தன்னை நரேந்திர மோடியின் பிரதிநிதிகள் இருவர் சந்தித்ததாகக் கூறியுள்ளார். அது தவறான தகவல். அவர் கூறுவது உண்மையாக இருந்தால், தன்னை சந்தித்த இருவர் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்.
காஷ்மீர் பிரச்சினை ஏற்பட காங்கிரஸ்தான் காரணம். சுற்றுலா வளர்ச்சிக்கு அபரிமிதமான வாய்ப்பு உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது.
நரேந்திர மோடி பிரதமரானால் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அந்த மாநிலத்தை வறுமையின் பிடியிலிருந்து மீட்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் முக்கியத்துவம் தருவோம். காஷ்மீரில் சுற்றுலாத்து றையை மேம்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பெரிய ஓட்டல்களும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங் களும் காஷ்மீரில் தங்களின் தொழிலைத் தொடங்க 370-வது சட்டப்பிரிவு தடையாக உள்ளது.
இச்சட்டத்தின்படி அந்த மாநிலம் சாராத நபர்கள் நிலம் வாங்க முடியாத நிலை உள்ளது.
ஹெலிகாப்டர் பேர ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் என்று காங்கிரஸ் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் மயமாக உள்ளது. பண வீக்கம் அதிகரித்ததில் உலக சாதனையை காங்கிரஸ் நிகழ்த்தியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட மாதிரியை தேசம் முழுமைக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். அந்த மாநிலத்தில் விவசாய வளர்ச்சி 11.5 சதவீதமாக உள்ளது.