வேட்பாளர்கள் தேர்தல் செலவுக் கணக்கை வாக்குப்பதிவு முடிந்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரத்தில் தங்கள் சொத்துக்கள் பற்றிய விவரங்களை மறைத்தோ அல்லது தவறான தகவலோ தரக்கூடாது.
வேட்பாளர்கள் மீது ஏதேனும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை மறைக்கக்கூடாது. அது மிகப் பெரிய குற்றமாகும். அவ்வாறு செய்தால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வேட்பாளருக்கு சிறை தண்டனை கிடைக்கும். இந்த புதிய முறை இப்போதுதான் அறிமுகம் செய்யப்படுகிறது.
பொதுப் பார்வையாளர்
தமிழகத்தில் தேர்தல் பணிகளை பார்வையிட, பொதுப் பார்வையாளர்கள் 20 பேர் ஏற்கெனவே வந்துவிட்டனர். மீதமுள்ள 19 பேரும் சனிக்கிழமை இரவுக்குள் வந்துவிடுவர். வேட்புமனு பரிசீலனை, வாக்குப்பதிவு கருவிகளை சரிபார்த்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.
பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தாக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவைப்படும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக ஜனவரி 10-ம் தேதியில் இருந்து மனு செய்த 13 லட்சம் பேரில், சுமார் 10 சதவீதம் பேரைத் தவிர அனைவரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
தேர்தலுக்கு ஊறு விளைவிக்கக் கூடியவர்கள் எனக் கருதப்படும் 13,927 பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் தந்துள்ளோம்.அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 20,737 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வாகனச் சோதனையில் இதுவரை ரூ.16.39 கோடி ரொக்கமும், ரூ.6.87 கோடி மதிப்பிலானபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அதிகபட்சமாக ரூ.2.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இதுவரை பணம், பொருள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறைகளில் பிரச்சினை ஏற்பட்டால் வாக்குப்பதிவை நிறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.