சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதை எதிர்த்து வாக்களித்தது அதிமுக எம்பிக்கள்தான், என திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபால் கூறினார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேணு கோபால், பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், “சில்லறை வர்த்த கத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது அதிமுக எம்பிக்கள் மட்டும்தான். சொற்ப எம்பிக்களை வைத்துக் கொண்டு தேவகவுடா பிரதமர் ஆகும் போது, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகும் முதல்வர் ஜெய லலிதா ஏன் பிரதமர் ஆகக் கூடாது. மேலும், ஜெயலலிதா பன்மொழி ஆற்றல் பெற்றவர் என்றார்
முன்னதாக, பிரச்சாரத்துக்கு சென்ற வேணுகோபாலை, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த பிரச்சாரத்தின் போது, பொன்னேரி எம்எல்ஏ பொன்.ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்றனர்.