மற்றவை

காங்கிரஸாருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்: ஒரே தொகுதிக்குள் பிரச்சாரம் செய்பவர்களுக்கும் ‘குட்டு’

செய்திப்பிரிவு

தஞ்சையில் தங்கபாலு பிரச்சாரத்தில் ரகளை செய்த காங்கிரஸாருக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்தார். அதேபோன்று ஒரு தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்கிற தமிழக காங்கிரஸ் தலைவர்களையும் அவர் சாடினார்.

மதுரை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டி.என்.பாரத் நாச்சியப்பனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை மதுரை வந்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி:தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: நான் இதுவரை 18 தொகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அங்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்ற டைந்துள்ளன. எனவே, அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கேள்வி: தஞ்சாவூரில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யச் சென்ற தங்கபாலுவை உங்கள் கட்சியினரே விரட்டியடித்துள்ளனரே?

பதில்: ஒருசில இடங்களில் இதுபோன்ற தவறான ஆர்வக்கோளாறு எங்கள் கட்சியில் இருக்கிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய செயல். ஏனென்றால், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தில் பெரும் வெற்றி பெற வேண்டும் என்று தலைவர்கள் எல்லாம் பாடுபட்டு வருகிறார்கள். சிலர் செய்கிற தவறான செயல், மற்றவர்களைப் பாதிக்கும் என்பதால், இதில் எனக்கு ஒரு சதவிகிதம்கூட உடன்பாடு கிடையாது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேள்வி: (ப.சிதம்பரம் உள்ளிட்ட) சில தலைவர்கள் ஒரே தொகுதியில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார்களே?

பதில்: இனிமேல் இதுபோன்ற தகவல் வந்தால், அவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாராக இருந்தாலும் அவர்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் இது இயக்கத்துக்கு முக்கியமான காலக்கட்டம்.

கேள்வி: இளைஞர்களுக்கு வழிவிடுகிறோம் என்று ப.சிதம்பரம் சொன்னார். நீங்கள் சொல்லவில்லையே?

பதில்: 35 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள்தான் இளைஞர்கள். 49 வயதுள்ளவர்கள் எல்லாம் இளைஞர்கள் கிடையாது.

கேள்வி: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அமைச்சர் நீங்கள். உங்கள் அமைச்சரவை சகாக்களில் இதைப்போல் ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியுமா?

பதில்: காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை எல்லோரும் தங்களுடைய துறைகளில் சிறப் பாக செயல்பட்டவர்கள்தான். கேஜ்ரிவால் போன்றவர்களுடைய குற்றச்சாட்டுகள், நூறு சதவிகிதம் போலியானவை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

கேள்வி: பொருளாதாரக் கொள் கைகளைப் பொருத்தவரையில் காங்கிரஸும் பாஜக.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்கிறார்களே?.

பதில்:

அகில இந்திய அளவில் என்றைக்கு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினார்களோ, அன்றில் இருந்து இடதுசாரிகளுக்கு சறுக்கல்தான். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இனி அவர்களுக்கு ஏறுமுகமே கிடையாது.

கேள்வி: தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸை மட்டும் கடுமையாகச் சாடுகிறாரே ஜெயலலிதா?

பதில்: பாஜக.வுக்கு ஆதரவான அவரது நிலைப்பாட்டை சிறுபான் மையின மக்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்துகூட பார்க்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT