“பழிவாங்கும் பேச்சு” தொடர்பாக தன்மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் அமித் ஷா புதன்கிழமை மனுதாக்கல் செய்தார்.
உத்தரப்பிரதேசத்தில் கலவரம் பாதித்த முசாபர் நகர் பகுதியில் பேசிய குஜராத் முன்னாள் அமைச்ச அமித் ஷா, “ஜாட் சமூகத்தினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டுமெனில் பாஜக வுக்கு வாக்களியுங்கள்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமித் ஷா மீது பிஜ்னோர் நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். அமித் ஷாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும், தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அமித் ஷா வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிஜ்னோர், ஷாம்லி ஆகிய இடங்களில் அமித் ஷாவின் பேச்சு விவரம் கொண்ட சி.டி.க்களை தாக்கல் செய்யுமாறு உ.பி. அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.