மற்றவை

சென்னை வாக்குச்சாவடி அதிகாரிகள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்

செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளின் அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை நடந்த பயிற்சி முகாமிலேயே தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாக்குச்சாவடி அதிகாரிகள், தங்கள் வாக்குகளை தபாலில் செலுத்தலாம். மக்களவைத் தேர்தலுக்காக சென்னை மாவட்டத்தில் 3,338 வாக்குச் சாவடி கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பணியாற்றவுள்ள 17,609 அதிகாரிக ளுக்கு 2-ம் கட்ட பயிற்சி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை சட்டமன்றத் தொகுதிவாரியாக 16 இடங்களில் நடத்தப்பட்டன. இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற வாக்குச் சாவடி அதிகாரிகள், தங்கள் தபால் வாக்குகளை அங்கேயே பதிவு செய்தனர்.

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்களான வாக்குச்சாவடி அதிகாரிகள் மட்டுமே தபால் வாக்குகளை அளித்தனர். அவர்களுக்காக பயிற்சி மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சென்னையை ஒட்டியுள்ள பெரும்புதூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் வாக்குரிமை பெற்றுள்ளவர்கள் வாக்களிக்கவில்லை. தபால் வாக்குகளுக்கான பணிகளை சம்பந்தப்பட்ட தொகுதி அதிகாரிகள் முடிக்காததால், அவர்கள் ஞாயிற்றுக் கிழமை தபால் வாக்குகளை அளிக்க இயலவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தபால் வாக்குகளை பதிவு செய்ய இன்னும் அவகாசம் உள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்களிக்காத வாக்குச்சாவடி அதிகாரி கள், தங்கள் வாக்குள்ள தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்கள் வாக்குகளை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT