மற்றவை

மின்வெட்டுக்கு காரணம் சதியா: சேலத்தில் தங்கபாலு பாய்ச்சல்

செய்திப்பிரிவு

மின்வெட்டுக்கு சதிதான் காரணம் என்று தமிழக முதல்வர் ஜெயல லிதா குற்றம்சாட்டுவது கடமையை செய்ய தவறிய செயல் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு கூறினார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜக. பிரதமர் வேட்பாளர் மோடி, அவர் முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலத்தை பற்றி பல தவறானதகவல்களை தெரிவித்து வருகிறார்.

உண்மையில் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் அல்ல. தொழில் துறை வளர்ச்சியில் குஜராத் 5-வது இடத்தில்தான் உள்ளது. முதலாளிகளுக்காக விவசாயிகள் நிலத்தை பறித்து ஆட்சி செய்பவர்தான் மோடி. அங்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் 27 சதவிகிதம் மக்கள் வசித்து வருகின்றனர்.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது குஜராத் எந்த துறையிலும் வளர்ச்சி பெறாத மாநிலம். உண்மைக்கு புறம்பான நம்பகத்தன்மையற்ற மோடி ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக-வின் சதிதான் காரணம், இதனால் மின் நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா கூறி வருகிறார்.

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மின் நிலையங்களில் யார் சதி செய்ய முடியும்? அப்படி நடந்திருந்தால் அந்த சதியை அவர்தான் கண்டுபிடிக்க வேண்டும். மின்வெட்டுக்கு சதி என்று கூறுவது, அவர் கடமையை செய்ய தவறிய செயல்.

முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள மின் நிலையங்களுக்கு அவரைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. இயந்திரக் கோளாறு காரணம் என்றால் யாரும் செல்ல முடியாது. மத்திய அரசோ, வேறு கட்சியினரோ அப்பகுதிக்கு செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது சதி என்பதை ஏற்க இயலாது.

தேர்தலுக்கு பின் மதச் சார்பற்ற அணிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT