மற்றவை

தமிழகத்தில் பிரச்சாரம் ஓய்ந்தது

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த 2 மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை மாலை ஓய்ந்தது. கடைசி நாளில் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் வரிந்துகட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. திமுக, சிறிய கட்சிகளுடன் சேர்ந்து களம் காண்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் தனியாக களமிறங்கியுள்ளன. இவர்களைத் தவிர முதல்முறையாக பாஜக தலைமையில் முக்கிய கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ளது. இதில் தேமுதிக, பாமக, மதிமுக, கொ.ம.தே.க., ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா, கடந்த மார்ச் 3-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார். எல்லா தொகுதிகளிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். கடந்த 19-ம் தேதி முதல் 3 நாட்கள் சென்னையில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். திங்கள்கிழமை மாலை தி.நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மார்ச் 26-ம் தேதி, சென்னையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், மாநில தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இடதுசாரி கட்சிகள் சார்பில் நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், பிரகாஷ் காரத், டி.ராஜா போன்ற முக்கிய தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது. திமுக தலைவர் கருணாநிதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரச்சாரத்தை முடித்தார். அப்போது தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்தார். விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரும் சென்னையில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகையிலும், திருமாவளவன் சிதம்பரத்திலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். கடைசி நாளில் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் போட்டி போட்டு இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பிரச்சாரத்தில் அனல் பறந்தது.

SCROLL FOR NEXT