வாக்குரிமையும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. சட்டமியற்றுவதில் எந்த அரசியல் கட்சி தங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை, தகுதியுள்ள குடிமக்கள் முடிவுசெய்வதற்கான உரிமைதான் வாக்குரிமை. இந்திய ஜனநாயகம் பலகட்சி ஜனநாயகம் என்ற சட்டகத்தோடு மேற்கண்ட உரிமையைப் பிணைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வெவ்வேறு சித்தாந்தங்களைப் பிரதிபலிக்கும் வெவ்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பெற விரும்பலாம். அதுதான் பலகட்சி முறை ஜனநாயகம். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய நாட்டில், பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு நாட்டில் பலகட்சி ஜனநாயகம்தான் சரியாக இருக்க முடியும். இந்திய அரசியலமைப்பின் சிற்பிகள் எதிர்பார்த்ததும் அதுதான். பல்வேறு தரப்பினரின் நலன்களையும், பெரும்பாலும் அந்தந்தப் பிராந்தியங்களின் நலன்களையும் முன்வைப்பதற்குப் பலகட்சி ஜனநாயக முறைதான் பெரிதும் உதவுகிறது. ஆரோக்கியமான எந்த ஒரு கூட்டமைப்புக்கும் அதுதான் உயிர்நாடி.
வீணான ஓட்டு
ஆள்வதற்கான பெரும்பான்மையை ஒரே ஒரு கட்சி மட்டும் அடிக்கடி பெறுவதில்லை என்பது பலகட்சி ஜனநாயகத்தின் குணாம்சங்களில் ஒன்று. அந்தக் கட்சி ஒத்த கருத்துடைய (பல நேரங்களில் ஒத்த கருத்துகள் இல்லாத) அணிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டியிருக்கும். இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தத் தேர்தலில் பரவலாக எழுப்பப்படும் ‘வீணான ஓட்டு’ என்ற கோஷம் ஆச்சர்யத்துக்குரியதே. பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பில்லாத அல்லது மிகக் குறைவான இடங்களைப் பெறுவதற்கு வாய்ப்புள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது வாக்குகளை வீணடிப்பதற்குச் சமம் என்று வாக்காளர்களிடையே அடிக்கடிச் சொல்லப்படுகிறது. நான் சமீபத்தில் கேள்வியுற்றதில் மிகவும் மேலோட்டமான, அவநம்பிக்கை கொண்ட வாதங்களுள் இதுவும் ஒன்று.
உண்மை உண்மைதான்
ஒரு கட்சி, அல்லது வேட்பாளர் அல்லது ஒரு சித்தாந்தத்தின் மீது தனக்குள்ள உறுதியான நம்பிக்கையை வாக்காளர் வெளிப்படுத்துவதற்கான அடையாளம்தான் ஓட்டு. பெரும்பான்மை எதை விரும்புகிறதோ, அல்லது விரும்பவில்லையோ, அல்லது நாட்டுக்கு எது நல்லது என்று அது நினைக்கிறதோ அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கானது மட்டுமேயானதல்ல ஒரு ஓட்டு என்பது. “நான் ஒரே ஒரு ஆள்தான் என்ற சிறுபான்மை நிலையில் இருந்தாலும்கூட உண்மை என்பது உண்மையாகத்தான் இருக்கும்” என்று காந்தி சொன்னதை நாம் நினைவுகூர வேண்டும்.
எதிர்ப்பின் குரல்
வேறு வகையில் சொல்வதானால், நீங்கள் வாக்களிக்க விரும்பும் கட்சி ஒரு இடத்திலோ, இரண்டு அல்லது 200 இடங்களிலோ வெல்கிறது என்பது முக்கியமல்ல. உங்களை யார் ஆள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை வாக்களிப்பதன் மூலம் நீங்கள் திட்டவட்டமாகத் தெரியப்படுத்துகிறீர்கள். அப்படி இருக்கும்போது ஓட்டு எப்படி வீணாகும்? நீங்கள் வாக்களிக்கும் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றாலும் பரவா யில்லை, அப்போது, அதிருப்தி, பன்முகத் தன்மை, எதிர்ப்பு ஆகியவற்றின் குரலாக உங்கள் ஓட்டு இருக்கும். அது இல்லையென்றால் நமது ஜனநாயகம் முறையாகச் செயல்படாது.
ஸ்திரத்தன்மைதான் அளவீடா?
ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பொய்யும் புரட்டுகளும் வாக்காளர்களுக்குப் புகட்டப்படுகின்றன. தனிப் பெரும்பான்மை பெறுவதற்கு வாய்ப்பில்லாத கட்சிக்கு வாக்களிப்பது தேசப்பற்று இல்லாத செயல்; அப்படி வாக்களித்தால் ஓட்டுகள் பிரிந்துவிடும், கூட்டணி ஆட்சி ஏற்படும் – இன்னும் மோசமாக- ஸ்திரமற்ற அரசாங்கம் ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் சொல்வதே இந்தப் பிரச்சாரங்களின் உள்நோக்கம். கடந்த 10 ஆண்டுகளாக ஒரே கூட்டணி ஆட்சிதான் ஸ்திரத்தன்மைக்குக் குந்தகம் இல்லாத வகையில் ஆண்டுவந்திருக்கிறது என்பதை நாம் நினைவுகூர வேண்டும். ஆனால், அந்த அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அது மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். எனவே, நல்ல அரசு என்பதற்கும் ஸ்திரத்தன்மைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவு. ஆகவே, ஸ்திரத்தன்மை என்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளில் முதன்மையானது அல்ல. மக்கள் விரும்புவது தூய்மையான, பொறுப்புள்ள, பொறுப்பேற்கக் கூடிய ஒரு அரசாங்கத்தைத்தான். இதைச் சாத்தியமாக்குவதற்கான வழிகளில் ஒன்றுதான், இதை முன்மொழியக் கூடிய ஒரு அரசாங்கத்துக்கு வாக்களிப்பது; வெறும் ஸ்திரத்தன்மைக்காகவும் தனிப் பெரும்பான்மைக்காகவும் எண்ணிக்கை விளையாட்டுக்காகவும் வாக்களிப்பதால் இதைச் சாத்தியமாக்கிவிட முடியாது.
இன்னொன்றையும் பார்க்க வேண்டும். இப்போது ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள அரசாங்கத்தின் மோசமான தோல்விகளில் சிலவற்றுக்கு அந்த அரசாங்கத்தைப் போலவே, பொறுப்பற்ற அதன் எதிர்க்கட்சியும் காரணமாகும். எனவே, இந்தத் தேர்தல் என்பது புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது மட்டுமல்ல, உறுதியான, பொறுப்பான எதிர்க்கட்சி களைத் தேர்ந்தெடுப்பதும் ஆகும்.
இளம் வாக்காளர்களின் வருகை
நாடு முழுவதும் மாநிலக் கட்சிகள் மென்மேலும் வலுவடைந்துவரும் வேளையில் மத்தியில் ஒரே ஒரு கட்சி ஆட்சியில் இருந்துகொண்டு அதிகாரம் செலுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஒன்று. நமது ஜனநாயகம் நாளுக்கு நாள் வலுப்பெற்றுவரும் சூழ்நிலையில் பெரும்பான்மையின் குரல்தான் ஒட்டுமொத்த நாட்டின் குரல் என்று நினைப்பதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. அமெரிக்க அரசியல் கோட்பாட்டாளர் ஜேம்ஸ் மேடிசன் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “ ‘பெரும்பான்மையின் நலன்களே அரசியல்ரீதியாக எது சரி, எது தவறு என்பதற்கான அளவுகோல்’ என்ற வாசகத்தைப் போல தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ள வாசகம் வேறெதுவும் இல்லை.” மக்கள்தொகையின் வெவ்வேறு பிரிவினரை விட புதிய வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் தேர்தல் இது. எனவே, எண்ணிக்கையில் அவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ இருந்தாலும் அவர்களுடைய வாக்குகள் அடுத்த மக்களவையை வடிவமைப்பதில் எவ்வளவு முக்கியமானவையாக இருக்கப்போகின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருப்பது அவசியம்.
‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: ஆசை