இதர மாநிலங்கள்

அமேதிக்காக எனது மகனை தந்துள்ளேன்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உருக்கம்

செய்திப்பிரிவு

அமேதி மக்களுக்காக எனது மகன் ராகுலை தந்துள்ளேன், அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு ஆதரவாக சோனியா காந்தி அங்கு பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற் கொண்டார். அமேதி நகரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

எங்களது குடும்பத்தின் கர்ம பூமி அமேதி. இந்தத் தொகுதியின் முன்னேற்றத்துக்காக ராகுல் காந்தி அர்ப்பணிப்பு உணர்வோடு கடினமாக உழைத்து வருகிறார்.

இந்திரா காந்தி தனது மகன் ராஜீவ் காந்தியை உங்களுக்காக (அமேதி) அர்ப்பணித்தார். இப் போது நான் எனது மகன் ராகுல் காந்தியை 2004-ம் ஆண்டு முதலே உங்களுக்காகத் தந்து விட்டேன். ராகுல் காந்தியையும் காங்கிரஸ் வேட்பாளர்களையும் நீங்கள் வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. அமேதியின் வளர்ச்சிக் காக ராகுல் காந்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத் தியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மீதமுள்ள திட்டங்களையும் அவர் நிறைவேற்றி முடிப்பார்.

ஊழலில் திளைக்கும் பாஜக

கழுத்து வரை ஊழலில் மூழ்கியுள்ள பாஜக தலைவர்கள் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், இதுவரை எதுவுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஊழலைத் தடுக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஊழல் விவகாரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலவச கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. வரும் காலத்தில் ஓய்வூதியம், தங்குமிட உரிமை மசோதா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

பிரியங்காவை முன்னிலைப் படுத்திய சோனியா

பொதுவாக அரசியல் பொதுக் கூட்டங்களில் சோனியா காந்தி பேசும்போது தனது மகள் பிரியங்காவின் பெயரைக் குறிப்பிடுவது இல்லை. முதல்முறையாக அமேதி பொதுக் கூட்டத்தில் பிரியங்காவின் பெயரை சோனியா உச்சரித்தார்.

“ராகுல், பிரியங்கா மீது நீங்கள் (அமேதி மக்கள்) மிகுந்த பாசம் வைத்துள்ளீர்கள்.

எங்களது குடும்பத்தினருடன் தோளோடு தோள் நின்று உறுதுணையாக செயல்படுகிறீர் கள்” என்று சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

SCROLL FOR NEXT