மற்றவை

ராமர் கோயில்: சட்ட விதிகளை மீற மாட்டோம்- பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் உறுதி

செய்திப்பிரிவு

ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம் என, பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ் தெரிவித்தார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

தமிழக அரசியல் பாதையில் மே 16-ம் தேதிக்குப் பின்னர் பெரிய மாற்றங்கள் இருக்கும். இதற்கு முன்பாக தமிழகத்தில் பாஜக தலைமையில் இவ்வளவு வலுவான கூட்டணி அமைந்தது இல்லை. தமிழகத்தில் அதிமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும். திமுகவில் உள்கட்சி பூசல், குடும்பப் பிரச்சினை அதிகம் இருப்பதால் இந்த தேர்தலில் வலுவிழந்து உள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி யில், தமிழகம் ஒரு முக்கியமான மாநிலமாகக் கருதப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 9 இடங்களில் சூறா வளி பிரச்சாரம் மேற்கொண்டார். அத்வானியும் வரும் 21-ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற் கொள்ள உள்ளார். இதனால், எங்களது கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.

ஊழல், தவறான நிர்வாகம் போன்ற காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட உள்ளது. நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். விவசாயம், தொழில் வளர்ச்சி, விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துதல், தெளிவான, ஊழல் அற்ற நிர்வாகம் எங்களது ஆட்சியின் முக்கிய குறிக்கோள்.

தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டுமானால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் மட்டுமே முடியும். தமிழகத்தில் வேளாண் தொழில், மின் தட்டுப்பாடு பிரச்சினைகள், மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் சரி செய்யப்படும் என்றார்.

நீலகிரியில் ஆதரவு யாருக்கு?

நீலகிரி தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

ராமர் கோயில் கட்டுவது சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாதா என கேட்ட போது, ராமர் கோயில் கட்டுவதில் அரசியல் அமைப்பு சட்ட விதிகளை நிச்சயம் மீற மாட்டோம். எனவே, சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக அமையாது என்றார்.

தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என கேட்டபோது, பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும். எங்களுடன் கூட்டணி கட்சியினரும் உள்ளனர். எங்களுக்குள் தர்ம சங்கடத்தை நீங்கள் (பத்திரிகைகள்) ஏற்படுத்த வேண்டாம் என்றார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறதே எனக் கேட்ட போது, அவர் பாமகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாரே, அது போதாதா. பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில்தானே உள்ளது. அவரும், எங்களுடனும், மோடியுடனும் தொடர்பில்தான் உள்ளார் என்றார்.

SCROLL FOR NEXT