தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் செயல் பட்டதாக ஈரோடு தேர்தல் அதிகாரி சண்முகத்திடம் பா.ஜ.க.வினர் கடந்த வெள்ளிக்கிழமை புகார் மனு கொடுத்தனர்.
இதற்கு பதிலளித்து தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் பிஷப் எம்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில் கடந்த 2-ம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரார்த்தனைக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். ஆனால், சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல. இந்தியச் சுயாதீன திருச்சபைகளில் மாமன்றத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பிரதம பேராயர் என்ற அள விலேயே சென்றிருந்தேன்.
நான் இந்தியச் சுயாதீன திருச்சபைகளில் மாமன்றத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பிரதம பேராயராக இருப்பதால் அந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவும் தேர்தல் அமைதியாக நடைபெற ஜெபிக்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதால் என் சொந்த வாகனத்தில்தான் சென்றேன். பா.ஜ.க.வினர் கொடுத்த புகாரில் உண்மை இல்லை.
இவ்வாறு பிஷப் பிரகாஷ் கூறியுள்ளார்.