தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது முதல் நடைபெற்ற பல தேர்தல்களை நாம் தனித்தே சந்தித்து வந்துள்ளோம். தற்பொழுது முற்றிலும் மாறாக பல கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றோம்.
தேனீக்களை போல் நீங்கள் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றுவீர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். தங்களுடைய தொகுதியில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டாலும், தேமுதிக கட்சி போட்டியிடுவதாக எண்ணி பணி யாற்றுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
நமக்குள்ளே சிறு, சிறு கருத்து மாற்றங்களோ, சங்கடங்களோ, சச்சரவுகளோ இருந்தாலும், அவற்றை தூக்கி எறிந்துவிட்டு கிராமங்கள் தோறும், தெருக்கள் தோறும், வீடு வீடாகவும் சென்று வாக்குகளை சேகரித்து, நம்முடைய கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளுடனும், அக்கட்சிகளின் தொண் டர்களுடனும் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடன் ஒன்றிணைந்து தேர்தலில்களப் பணியாற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.