இதர மாநிலங்கள்

பெண்களின் போன்களை ஒட்டு கேட்கிறது குஜராத் அரசு: ராகுல் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பெண்களின் போன்களை ஒட்டுக் கேட்கிறது குஜராத் அரசு. அதற்கு பெண்கள் மீது பரிவு, பாசம் எதுவும் கிடையாது என்று குற்றம்சாட்டினார் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல்.

நரேந்திர மோடி உத்தரவின் பேரில் இளம்பெண் ஒருவரை வேவு பார்த்ததாக வெளியான சர்ச்சை குறித்து காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் பிரியங்கா காந்தி தாக்கிப் பேசி வரும் நிலையில் ராகுல் காந்தியும் மோடியின் உத்தரவின் பேரில் பெண் வேவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை எழுப்பி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர் காவூன் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி வியாழக்கிழமை பேசியதாவது: குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தொழிலதிபர் ஒருவருக்கு 45 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலத்தை வழங்கியுள்ளார். இது நாள் வரை அங்கு தொழிற்சாலை எதுவும் அமைக்கப்படவில்லை.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருக்காவிட்டால் குஜராத் விவசாயிகள் பட்டினியால் உயிரிழந்து விட்டிருப்பார்கள். குஜராத் மாடல் வளர்ச்சித் திட்டத் தால் எந்தவித பலனுமே இல்லை.

குஜராத் அரசுக்கு பெண்கள் மீது பரிவு பாசம் ஏதும் கிடையாது. அவர்களது போன்களையும் ஓட்டு கேட்கிறது அந்த அரசு. ஆனால், மகளிருக்கு மரியாதை தர காங்கிரஸ் தவறுவதில்லை.அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதிலும் காங்கிரஸுக்கு நம்பிக்கை இருக்கி றது. நாட்டை ஆள நினைக்கும் நரேந்திர மோடி, பாஜகவின் மூத்த தலைவர்களான ஜஸ்வந்த் சிங், எல்.கே.அத்வானி உள்ளிட்ட தலைவர்களை ஓரங்கட்டி விட்டார்.

சமாஜ்வாதி கட்சி மீது தாக்கு

வேலைதேடி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கள் மகாராஷ்டிரம் சென்றால் அங்கு அவர்களை சிவசேனை, பாஜகவினர் அடித்து உதைத்து சொந்த ஊருக்கு விரட்டி அடிக்கி றார்கள். ஆளும் சமாஜ்வாதி கட்சி இதற்கு என்ன சொல்லப் போகிறது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியோ ஏழைகளின் நிலங்களை தான் ஆட்சியில் இருந்தபோது பறித்துக் கொண்டு செல்வச் செழிப்பில் மிதக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சீதாபூர் மற்றும் தவுராரா ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என்றார் ராகுல் காந்தி.

தனது பிரச்சாரத்தில் ஜிதின் பிரசாத் (தவுராரா), மற்றும் வைசாலி அலி (சீதாபூர் ) ஆகிய வேட்பாளர்களுக்கு ராகுல் ஆதரவு திரட்டினார்.

SCROLL FOR NEXT