இதர மாநிலங்கள்

ஏடிஎம் மையங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் கறுப்புப்பணமா? - வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை

செய்திப்பிரிவு

ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் தனியார் வாகனங்களில் கறுப்புப்பணம் கொண்டு செல்லப்படலாம் என்பதால் அவை, வருவாய் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் நடைபெறும் தருணத்தில் இந்த வாகனங்கள் மூலமாக கறுப்புப்பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்படலாம் என்பதால் அதைத் தடுத்திட இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த வாகனங்களில் கறுப்புப்பணம் கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாக உளவுத் தகவல்கள் வெளியாகவே அண்மையில் நிதி அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் கறுப்புப்பணம் கொண்டு செல்லப்படலாம் என்பதால் அதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இதில் ஆராயப்பட்டது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் தனியார் பாதுகாப்பு அமைப்புகளால் நடத்தப்படுபவை. இவற்றை பல்வேறு வங்கிகளும் பயன்படுத்திக்கொள்கின்றன. வங்கிகள் ஈடுபடுத்துவதால் இந்த வாகனங்களை பாதுகாப்பு அமைப்புகள் அதிக கெடுபிடி இன்றி மேலோட்டமாக சோதனையிட்டு அனுப்பி விடுகின்றன. இந்நிலையில், கறுப்புப் பண புழக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி இந்திய வங்கிகள் சங்கத்துக்கு அறிவுறுத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏடிஎம் மையங்களுக்கு பணம் ஏற்றிச்சென்ற வேன் ஒன்றில் கணக்கில் வராத பணமும் இருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே வருவாய் புலனாய்வு இயக்குநரகம், மத்திய பொருளாதார புலனாய்வு மையம், அமலாக்க இயக்குநரகம் உள்ளிட்ட வருவாய் புலனாய்வு அமைப்புகள் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்புடன் உள்ளன என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடு முழுவதிலும் தேர்தல் ஆணையம் நியமித்த குழுக்கள் இதுவரை ரூ. 195 கோடி பறிமுதல் செய்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 118 கோடி, தமிழகத்தில் ரூ. 18.31 கோடி, மகாராஷ்டிரத்தில் ரூ.14.40 கோடி, உத்தரப் பிரதேசத்தில் ரூ. 10.46 கோடி, பஞ்சாபில் ரூ. 4 கோடி, பிற மாநிலங்களில் சிறிய அளவில் என உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதேபோல் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக 26.56 லட்சம் லிட்டர் மது, 70 கிலோ ஹெராயின் போதைப் பொருள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பணம், இனாம் வழங்கியதாக 11469 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் செய்யும் செலவைக் கண்காணிக்க நாடு முழுவதுக்கும் 650 இந்திய வருவாய்ப்பணி அதிகாரிகளை நிதி அமைச்சகம் ஈடுபடுத்தி இருக்கிறது.

இந்த தேர்தலுக்காக மொத்தத்தில் ரூ. 5000 கோடி வரை செலவாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கணிக்கின்றன.

SCROLL FOR NEXT