‘பு
ண்ணியம் தேடி ராமேஸ்வரத்துக்கு யாத்திரை வருபவர்கள், மனநிலை தப்பிய தங்களது உறவுகளை இங்கு கொண்டுவந்து தொலைத்துவிட்டுப் போகிறார்கள். இதனால், ராமேஸ்வரம் பகுதியில் பரதேசி கணக்காய் சுற்றித் திரியும் மனநோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ தி இந்து உங்கள் குரலில் வாசகர் ஒருவர் இப்படிச் சுட்டிக்காட்டி இருந்தார். அதுகுறித்த கள விசாரணையில் கிடைத்த தகவல்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை!
இந்த சமூகம் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருக்கிறது. ஆனால், மன நோயாளிகளை மட்டும் ஏற்க மறுக்கிறது. சொந்த உறவுகளே இவர்களை கவுரப் பிரச்சினையாக கருதுகிறார்கள். மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களால்தான் மனநோய் வருகிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதனால்தான், மனநோய் என்பது கடவுளின் சாபம், பேய் கோளாறு, சூனியம் என்று ஏதேதோ சொல்லி மனநோயாளிகளை புனிதத் தலங்களில் கொண்டுபோய் விடும் கலாச்சாரம் இன்னமும் தொடர்கிறது. ராமேஸ்வரம், ஏர்வாடி, திருச்சி குணசீலம், நெல்லை மாவட்டம் புளியம்பட்டி, வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணம்.
தென்னகத்தின் காசி என்று சொல்லப்படும் ராமேஸ்வரத்தில் சமீபகாலமாக மன நோயாளிகள் வந்திறங்குவது அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பகுதியினர் ஆந்திரம் மற்றும் பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களில், தானாக தப்பித்தோ வழிதவறியோ வந்தவர்களைவிட, யாத்திரை வருவது போல் அழைத்து வந்து உறவுகளால் தெரிந்தே தொலைக்கப்பட்டவர்களே அதிகம்.
புளியம்பட்டி, ஏர்வாடியில் மனநோயாளிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வசதிகள் இருக்கின்றன. ஆனால், ராமேஸ்வரத்தில் அப்படியில்லை. குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் மனநோயாளிகள் சாக்கடை தண்ணீரையும், கடல்நீரையும் குடிக்கின்றனர். சரியான சாப்பாடும் தங்குமிடமும் கிடைக்காமல் மழையில் நனைந்து வெயிலில் காய்கின்றனர் இவர்கள்.
ராமேஸ்வரத்துக்கு நாம் நேரடியாகச் சென்றபோது, அங்குமிங்குமாய் மனநோயாளிகள் கூட்டத்தோடு கூட்டமாய் நடமாடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வேற்று மொழி பேசுபவர்கள். அக்கினித் தீர்த்தக் கடலில் யாத்திரிகர்களோடு சேர்ந்து இவர்களும் கடலில் மூழ்கி தண்ணீர் சொட்டச் சொட்ட அப்படியே எழுந்து செல்கிறார்கள். கடற்கரை நடைபாதையில் அமர்ந்து அவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தோம். அப்போது, நம்மை நோக்கி வந்தார் ஒரு டிப்டாப் இளைஞர். கரை ஒதுங்கிய கடல்தாமரைகள், சில சங்குகளை ஒரு கையிலும், மற்றொரு கையில், ஏதோ எழுதியிருந்த அட்டையையும் வைத்திருந்தார். வந்தவர், ‘சாப்பிட ஏதாவது காசு கொடுங்கள்’ என்றார் ஆங்கிலத்தில்! 10 ரூபாயை நீட்டிவிட்டு, அவர் கையில் வைத்திருந்த அட்டையை உற்று நோக்கினோம்.
அதில், ‘என் பெயர் சதீஷ். ரொம்ப ஏழ்மை நிலையில் இருக்கிறேன். என்னுடைய அம்மா 2009-ல் இறந்து விட்டார். தினமும் நான் ரயில்வே ஸ்டேஷனில் தூங்குகிறேன், என்னிடம் பணமும் சாப்பாடும் இல்லை. தயவு கூர்ந்து உதவி செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ”என்ன படிச்சிருக்கீங்க, எங்கிருந்து வர்றீங்க?” என்று மெதுவாகக் கேட்டதும், ஆங்கிலம், தெலுங்கில் அவர் சரளமாக பேச ஆரம்பித்தார், ”ஐதராபாத் பக்கம் சூரியபேட்டா என்னோட சொந்த ஊர். எம்.எஸ்.சி., படித்துள்ளேன். நானும் ஒரு விஞ்ஞானி தான்” என்று அவர் சொன்னதைக் கேட்டு நமக்கு தூக்கிவாரிப் போட்டது.
நமது ‘ஜெர்க்’கைப் பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தார், ”என்னோட அப்பா இறந்தபிறகு அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது அப்பாவுக்குத் தம்பி பிறந்தான். கொஞ்ச நாள் என்னோட வளர்ப்பு அப்பா, என்னையும், அம்மாவையும் நல்லாப் பார்த்துக்கிட்டார். பிறகு, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிறைய சண்டை வந்தது. ஒரு நாள் அம்மா, வீட்டுல இறந்து கிடந்தார். அவர் போனபிறகு வளர்ப்பு அப்பா என்னை துரத்திவிட்டுட்டார். எனக்காக யாருமே இல்லை. அப்பலருந்து ஊர் ஊரா ரயிலில் சுற்றுகிறேன்.
இந்தியாவில் நான் போகாத ஊரே இல்லைனு சொல்லலாம். இரண்டு நாளைக்கு முன்னாடிதான் ராமேஸ்வரம் வந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் இரவு தூங்கிட்டு இருந்தேன். நாலஞ்சு பேர் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்தாங்க. தூங்கவிடமாட்டேங்கிறாங்க” என்றவர், நமது பதிலுக்காக காத்திருக்காமல் ‘வாக்’ ஆனார். கந்தலான அழுக்குச் சட்டையும் கையில் ஒரு பையுமாய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு நபரிடம், “எங்கிருந்து வர்றீங்க, எதுக்கு இங்க வந்தீங்க?” என்றோம். ”நான் கேரளா, அப்படியே சுத்திப்பார்க்கலாம்னு வந்தேன்” என்றார். ”உங்களுக்கு என்ன பிரச்சினை.. ஏன் இப்படியிருக்கீங்க?” என்றோம். “எனக்கு ஒன்றும் இல்ல, உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினையா?” என்று நம்மை மிரட்டிவிட்டு, தான் மிரண்டது போல் ஓடினார்.
இப்படி, அக்கினித் தீர்த்தக் கடல் பகுதியில் திரியும் மனநோயாளிகள், மனநலம் பாதித்தவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு சோகக் கதை ஒளிந்திருக்கிறது. ஆனால், அவர்கள் அந்த சோகத்தை வெளிக்காட்டத் தெரியாமல் கவலையில்லாத மனிதர்களைப் போல திரிகிறார்கள்.
இவர்களைப் பற்றி அக்கினித் தீர்த்தக் கடல் பகுதியில் பொம்மை விற்கும் வியாபாரி எம்.சேகரன் நம்மிடம் பேசுகையில், ”ராமேஸ்வரத்துல தினமும் புதுசு புதுசா ரெண்டு, மூணு மனநோயாளிகளையாச்சும் பார்க்கிறேன். இவர்களை மீட்கவும், இவர்கள் வருவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படாததால் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுது. இங்க வந்த கொஞ்ச நாளைக்கு சாதாரணமா நடமாடுவாங்க. அப்புறமா டேஞ்சராகிருவாங்க. சிலபேரு திடீர் திடீர்னு காணாமலும் போயிடுறாங்க. வேற இடத்துக்குப் போயிடுறாங்களா, கடல்ல மூழ்கி இறந்துடுறாங்களா அல்லது வேறெதாவது சிக்கல்ல மாட்டிக்கிறாங்களான்னும் தெரியல.” என்றார்.
தமிழ்நாடு மனநலத்திட்டத்தின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளரும், மனநல மருத்துவருமான செ.ராமசுப்பிரமணியனிடம் இதுகுறித்துப் பேசினோம். “எல்லா மன நோயும் தீர்க்கப்படக்கூடியதுதான். இதுவும் ஒரு வியாதிதான் என்பதை உணராதவர்கள் இதை தீர்க்கவே முடியாது என்ற முடிவுக்குச் சென்று விடுகின்றனர். அதேசமயம், இதற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள் இந்தியா முழுவதுக்குமே மொத்தம் ஐயாயிரம் பேர்தான் உள்ளனர். மனநோயாளிகள் தங்கிச் சிகிச்சைபெற இந்தியாவில் 42 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே இருக்கிறது. மேலும், இந்த சிகிச்சைக்கான எல்லா மருந்துகளுமே விலை அதிகம். இதில்லாமல், சாப்பாடு, போக்குவரத்துச் செலவுக்கும் பணம் தேவை. இந்த சிகிச்சை ஓரிரு நாளிலும் முடியக்கூடியதும் இல்லை. தொடர்ந்து 2, 3 ஆண்டுகள் மருந்து எடுக்கவேண்டும். இதற்கெல்லாம் நடுத்தர, ஏழை குடும்பங்கள் தயாரில்லை; அவர்களிடம் அதற்கான விழிப்புணர்வும் இல்லை. இதனால், குணப்படுத்தக்கூடிய ஒரு வியாதியை குணப்படுத்த முடியாததாகவே ஆக்கிவிடுகிறார்கள்.
மன நோயாளிகளை கண்டால் அவர்களை அருகில் உள்ள மன நல மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும். அவர்களை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்; அவர்களால் மற்றவர்களுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு, மற்றும் தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில், அவர்கள் தற்கொலை செய்யவும் விபத்துகளில் அடிப்பட்டு இறக்கவும் வாய்ப்புள்ளது.
மனநல பிரச்சினையையும், மனநோயாளிகளையும் சமூகம் சார்ந்த பிரச்சினையாக கருதினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும். 2001-ல் ஏர்வாடி மனநல காப்பக தீ விபத்து நடந்தது. அதன்பிறகு, மனநலத் துறையில் மனநோயாளிகளை காக்க எல்லா மாவட்டத்திலும் மனநல மருத்துவர்களையும், மன நல மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளனர். மறுவாழ்வு துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 நோயாளிகளை வைத்து பாதுகாக்கும் வகையில் காப்பகங்கள் அமைக்கப்படுகிறது. ஆனாலும், மன நலத்துறைக்கான தேவைகள் அதிகமாகவே இருக்கிறது’’ என்றார் அவர்.