மற்றவை

மதுரை, திருச்சி, கோவையில் சோனியா, ராகுல் விரைவில் பிரச்சாரம்: உத்தேச சுற்றுப்பயண திட்டம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, திருச்சி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் சோனியா மற்றும் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இதேபோல், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, நடிகர் கார்த்திக், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கின்றனர். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் அவர் போட்டியிடும் மயிலாடுதுறை தொகுதியிலும், காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூண் அவர் போட்டியிடும் தேனி தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழகம் வரவுள்ளனர்.

இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பயணத் திட்டங்களை டெல்லிக்கு அனுப்பியுள்ளோம்’ என்றனர்.

அதேநேரம் சோனியா, ராகுல் ஆகியோர் சென்னையில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித் தனர். கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் சிலவற்றில் சோனியா, ராகுல் காந்தி ஆகி யோர் பிரச்சாரம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. ஆனால், இறுதி சுற்றுப்பயண திட்டம் இன்னும் முடிவாகவில்லை. இரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

சோனியா, ராகுல் ஆகியோர் சென்னையில் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். இரு தினங்களில் அதிகாரப் பூர்வமாக பயண திட்டம் அறிவிக்கப்படும்

SCROLL FOR NEXT