ரிப்போர்ட்டர் பக்கம்

சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற திவாகரனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது: திருமாவளவன் பேட்டி

மு.அப்துல் முத்தலீஃப்

சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற திவாகரனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

''அதிமுகவில் சமூக ரீதியாகப் பார்த்தால் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் அமைச்சரவையில் கொடுத்த பிரதிநிதித்துவம் மிகவும் குறைவு. ஒப்பீட்டளவில் மற்ற சமூகத்தினரை வைத்து பார்க்கும் போது மிக மிகக் குறைவு.

அதிகாரமில்லாத பதவி எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு , திமுக ஆட்சியிலும் இதே நிலைதான். தலித் சமுதாய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த போதும் அதிகாரமில்லாத பதவி, எண்ணிக்கை மிக குறைந்த அளவிலும்தான் பிரதிநிதித்துவம் வழங்கியிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி அமைச்சரவை அமைந்த போது , அரசியல் நெருக்கடி அமைந்த போதும் கூட தலித் சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில் தற்போது எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையில் திவாகரன் இந்தக் கருத்து சொல்லி இருக்கிறார். நெருக்கடியான சூழ்நிலையில் கூட இந்த கருத்தை கூறியிருப்பதை வரவேற்கிறேன். கடந்த காலங்களில் அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் இந்த காலகட்டத்தில் பரிசீலிக்கப்படுகிறார்கள் என்பதை நான் நல்ல விஷயமாக பார்க்கிறேன்.

தற்போது எடப்பாடி, ஓபிஎஸ் இணைந்த பின்னர் அமைச்சரவையை மாற்றி அமைக்கிறார்கள் , அதில் கூட தலித் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.எந்த அதிகாரப் பகிர்வும் இல்லாமலேயே இவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும், எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட தலித்துகளை லேசாக கையாள முடியும் என்பது பொது சிந்தனையாக உள்ள நிலையில் திவாகரனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது.

அதிமுகவில் உள்ள தலித் எம்.எல்.ஏக்களிடையே கூட இத்தனை நாட்களாக ஒரு ஒற்றுமையுமில்லை, உணர்வு ஏன் வரவில்லை எனபது ஆச்சர்யமாக உள்ளது. தனபாலுக்கும் சரி அங்குள்ள அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் சரி நாங்கள் இத்தனை பேர் இருக்கிறோம் எங்கள் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுங்க இத்தனை பேர் இருக்கிறோம் துணை முதல்வர் கொடுங்க , நிதித்துறை கொடுங்கன்னு கேட்க வலிமையற்றவர்களாவும், துணிவில்லாதவர்களாகவும் இருந்தனர்.

அதிமுகவில் உள்ள தலித் வாக்கு வங்கி , தலித் சட்டமன்ற உறுப்பினர்களைக் கவர இது போன்ற கோரிக்கை வைக்கிறார் என்று கூட குற்றச்சாட்டு எழலாம். ஆனால், அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலிலாவது இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். இது தலித் சட்டமன்ற உறுப்பினர்களை வெளிக்கொண்டுவரும் முயற்சியாகக் கூட இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எடப்பாடி அதை தவிர்க்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது'' என்றார் திருமாவளவன்.

SCROLL FOR NEXT