ஜூ
டி ஷீண்ட்லின் என்றால் யார் என்றே பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரியாது. நீதிபதி ஜூடி என்றால் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு, அல்லது அமெரிக்க வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ‘ரியாலிட்டி ஷோ’ தொடரைப் பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மன்ஹாட்டன் நகர குடும்ப நீதிமன்ற நடுவராக இருந்து ஓய்வுபெற்ற அவர், 21 ஆண்டுகளாக டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அமெரிக்கர்கள் தங்களுடைய சின்னஞ்சிறு பிரச்சினைகளை அவரிடம் பஞ்சாயத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.
அவருடைய ஒரு நிகழ்ச்சி இணையதளங்கள் வழியாக உலகம் முழுக்க வைரலானது. பார்ப்பதற்கே அழகான நாய்க் குட்டி ஒன்றுக்கு ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சொந்தம் கொண்டாடினர். அந்த நாய்க்கு சாப்பிட என்ன கொடுக்கிறோம் என்பதிலிருந்து சமீபத்தில் அதற்கு வந்த நோய்க்கு டாக்டர் பரிந்துரைத்த மருந்துச் சீட்டுப் பட்டியல் வரை காட்டி அது தன்னுடையதுதான் என்று அந்தப் பெண் வாதாடினார். நீதிபதி ஜூடி இதையெல்லாம் சட்டை செய்யாமல், ‘அந்த நாயைக் கீழே விடு’ என்று மூன்று முறை கூறினார். அந்தப் பெண் வேறு வழியின்றி கீழே விட்டதும் அது அந்த ஆண் மீது பாய்ந்து அவரை கொஞ்சி மகிழ்ந்தது.
.இதை ஏன் இப்போது சொல்கிறேன்? கடந்த வாரம் தலைப்புச் செய்தியாக வந்த ஒரு செய்தி தொடர்பாகத்தான்; இதில் சொந்தம் கொண்டாடப்படுவது நாய் அல்ல, 24 வயதான இளம் பெண். அந்தப் பெண்ணின் பெற்றோர் ஒரு புறம், அந்தப் பெண்ணின் கணவர் மறுபுறம். கேரளத்தில் இது நடந்தது. இந்த வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்துக்கே சென்றுவிட்டது. மாநில உயர் நீதிமன்றம் ஒரு ஆதாரத்தைக் காரணமாக வைத்து, அந்தப் பெண் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்டதே செல்லாது என்று கூறிவிட்டது. அந்தப் பெண்ணை மணந்துகொண்டவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
நம்முடைய உச்ச நீதிமன்றம் அகிலா என்ற அந்தப் பெண்ணை யாருடைய வீட்டுக்கு அல்லது எந்த மதத்துக்குச் செல்ல விரும்புகிறார் என்று கேட்கவில்லை. இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மையை விசாரிக்குமாறு தேசியப் புலனாய்வு முகமை’யை (என்.ஐ.ஏ.) பணித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கை விசாரிக்கின்றனர். கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஒரு புறமும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங், ஷியாம், மாதவி திவான் ஆகியோர் எதிர்புறமும் ஆஜராகின்றனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்று சட்டப்படியான ஆய்வை நீதிபதிகள் மேற்கொள்ளவில்லை. உண்மை அறியுமாறு கூறும் ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த இளம்பெண்ணின் தரப்பில் என்.ஐ.ஏ.வின் அறிக்கை பாரபட்சமற்றதாக இருப்பின் அதை ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. என்.ஐ.ஏ. விசாரித்து உண்மைகளைத் தெரிவித்த பிறகு, மூடிய அறையில் அந்தப் பெண்ணின் தரப்பை நீதிபதிகள் கேட்பார்கள்.
கேரளத்தின் கோட்டயம் நகரில் மருத்துவக் கல்வி முடித்த பட்டதாரிதான் அகிலா. இப்போது தன்னை ஹதியா என்கிறார். தங்களுடைய பெண்ணுக்கு மதத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டு இருப்பதாக எச்சரிக்கையடைந்த பெற்றோர், கேரள உயர் நீதிமன்றத்தை நாடினர். தங்களுடன் இருந்தால் மட்டுமே அகிலாவால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கோரினர். 2016 ஜனவரியில் உயர் நீதிமன்ற அமர்வு அவர்களுடைய கோரிக்கையை நிராகரித்தது. வயது வந்த அவரால், தான் யாருடன் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்று அந்த அமர்வு சுட்டிக்காட்டியது. 2016 ஆகஸ்டில் பெற்றோர் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இதற்கிடையே ‘சத்யசாரணி’ என்ற இஸ்லாமிய அமைப்புடன் சேர்ந்து வாழத் தொடங்கினார் அகிலா. அந்த அமைப்பு வலதுசாரி இயக்கம், ஆனால் அரசால் தடை செய்யப்படாதது. வேறு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது. அந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது ஷெஃபி ஜஹான் என்பவருடன் நீதிமன்றம் வந்த அகிலா, அவரைத் திருமணம் செய்துகொண்டுவிட்டதாகக் கூறினார்.
‘அந்தத் திருமணம் வெறும் நாடகம், தனக்கு எது நல்லது என்று தீர்மானிக்கும் அளவுக்கு அவர் முதிர்ச்சி அடையவில்லை, பெற்றோருடன் இருப்பதுதான் அவருக்கு நல்லது’ என்று இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆணையிட்டது. இந்த வழக்கில் முதல் மனுவை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவர் இந்து, இன்னொருவர் முஸ்லிம். அவர்கள் அந்தப் பெண்ணே தீர்மானிக்கும் வயதுடையவர் என்று தீர்ப்பளித்தனர். அடுத்த அமர்வில் இருந்த இருவரும் கிறிஸ்தவர்கள்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள உச்ச நீதிமன்றத்தின் கவனிக்கத்தக்க ஒரு அம்சம், அதனுடைய எச்சரிக்கை உணர்வு. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியா, தவறா என்று நீதிபதிகள் சொல்லவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த மனுவை விசாரித்தபோது கூறியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.
அவற்றில் சில:
“அகிலாவுக்குத் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் எதிர்காலம் குறித்தும் தெளிவான, தொடர்ச்சியான சிந்தனை ஏதும் இல்லை. அவருடைய பெற்றோரிடமிருந்து அவரைப் பிரித்துவிட வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்களின் கட்டளைப்படிச் செயல்படுகிறார்”.
“தன்னுடைய பெண்ணை, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்கள் இந்தியாவிலிருந்தே கொண்டுபோய்விடுவார்கள் என்று பெண்ணின் தந்தை அஞ்சுகிறார். தன்னுடைய பெண் முஸ்லிமைத் திருமணம் செய்துகொண்டுவிடுவார் என்று தந்தை நினைத்தது போலவே பிறகு நடந்திருக்கிறது.. முகநூல் பதிவைப் பார்க்கும்போது அவளை மணந்துகொண்டவருக்குத் தீவிரவாத இயக்கங்கள் மீது அனுதாபம் இருக்கும்போலத் தெரிகிறது”.
“அவருடைய வாழ்க்கையின் முக்கிய முடிவான திருமணம் என்பது அவருடைய பெற்றோரின் தீவிர பங்கேற்புடன்தான் இருக்க வேண்டும்”.
ஒரு வழக்கில் எந்தவித விசாரணைக்கும் உத்தரவிடும் அதிகாரமும் அந்த விசாரணையை யார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் வரம்பும் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆணைகளைப் பரிசீலிக்காமல் ஒத்திவைப்பது, சமூகரீதியாக பிற்போக்கான பல விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நாலு காலும் ஐந்தறிவும் உள்ள நாய்க் குட்டிக்கு வேண்டியவர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க, அதைக் கீழே வை என்று நீதிபதி ஜூடி ஆணையிட்டார். 24 வயது பெண்ணால் சுயமாக அவருடைய இரண்டு கால்களில் நிற்க முடியும் என்று நாம் நம்பக்கூடாதா?
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘திபிரிண்ட்’ தலைவர்,
தலைமை ஆசிரியர்.