ஒ
ரு புள்ளிவிவரம்: இந்தியாவில் தினமும் 30 கோடி பேர் இரவு உணவின்றி பட்டினியாக படுக்கின்றனர். 18 கோடி பேர் காலை அல்லது மதியம் உணவு இல்லாமல் தவிக்கின்றனர். உலகிலேயே மிக அதிகமாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறமோ, இந்தியாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் மட்டுமே ஆண்டுக்கு 100 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது. ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அளிக்கும் தகவல் இது!
கட்டுரைக்கு வருவோம். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அன்னதானம் என்பது நமது தொன்று தொட்ட கலாச்சாரங்களில் ஒன்று. பிறந்த நாள் தொடங்கி, நினைவு நாள்வரை அனைத்துக்கும் அன்னதானம் அளிக்கும் சமூகம் நம்முடையது.
அப்படிப்பட்ட அன்னதானம் தமிழகத்தில் அதன் அடுத்த பரிணாமத்தை அடைந்திருக்கிறதோ என்று நினைக்க வைக்கின்றன சில நல்ல உள்ளங்களின் செயல்பாடுகள். கோவையைச் சேர்ந்த ‘யூத்ஃபுல் இந்தியா’ என்கிற அமைப்பின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி. இவர் நடத்தி வரும் ‘ஃபுட் பேங்க்’ அமைப்பு வாரத்தில் மூன்று நாட்கள் தினமும் சராசரியாக 250 முதல் 300 பேருக்கு உணவு வழங்கி வருகிறது. தங்கள் வீட்டில் சமைத்த உணவையே சுடச்சுட பேக் செய்து அளிப்பதுதான் இவர்களின் தனிச் சிறப்பு!
வைஷ்ணவியிடம் பேசினோம். “தினசரி ஒரு குடும்பத்தின் உணவிலிருந்து தலா ஒருவருக்கு உணவு பகிர்ந்து கொடுத்தாலே உலகில் யாரும் பட்டினி கிடக்க நேரிடாது. இந்த நோக்கத்தின் அடைப்படையில்தான் கடந்த 2015-ம் ஆண்டு ஓரிரு நண்பர்களுடன் இணைந்து ‘ஃபுட் பேங்க்’ அமைப்பை தொடங்கினோம். வழக்கமாக பொது இடத்தில் அன்னதானம் போடுவதுபோல் இல்லாமல் நம் வீட்டில் சமைக்கும் உணவுடன் இன்னும் சிலருக்கு சேர்த்து சமைப்பதுதான் எங்கள் அமைப்பின் நோக்கம். அதன்படி, ஆரம்பத்தில் சிலருடன் இணைந்து தினமும் 20 பேருக்கு ஒருவேளை உணவு அளித்து வந்தோம். பிறகு முகநூலிலும் வாட்ஸ் அப் அமைப்பிலும் குழுக்களை உருவாக்கி தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம். தற்போது எங்கள் அமைப்பில் 200 தன்னார்வலர்கள் செயல்படுகிறார்கள். சுமார் 6,000 பேர் எங்களை பின்தொடர்கிறார்கள்; உதவுகிறார்கள்.
தற்போது வாரத்தில் மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளிலும் தினசரி 250 முதல் 300 பேருக்கு உணவு அளித்துவருகிறோம். வியாழன் அன்று, மாலை வேளையிலும், சனி, ஞாயிறுகளில் காலை 11 மணிக்கும், கோவை மாநகரில் சாலையோரம் இருக்கும் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு உணவு அளிக்கிறோம்.” என்கிறார் வைஷ்ணவி.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சி ஆகிய நகரங்களில் இதே பாணியில் செயல்படும் ‘நோ ஃபுட் வேஸ்ட்’ அமைப்பு உணவு விநியோகிப் பதுடன், நகரில் ஆங்காங்கே குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்தும் உணவுப் பொருட்களை சேகரிக்கிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த பத்மநாபன், “திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் சுமார் 10 சதவீத உணவு மீதமாகிறது. அதைக்குப்பையில் கொட்டுவதை தவிர்க்க குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்துள்ளோம். அதேசமயம், அதில் வைக்கப்படும் உணவின் தரத்தை சோதித்து நன்றாக இருந்தால் அன்றைய தினமே விநியோகிக்கிறோம். மறுநாள் விநியோகிப்பதில்லை. காய்கனிகளும் குளிர்ப்பதன பெட்டியில் சேகரமாகின்றன. இதன் மூலம் மேற்கண்ட நகரங்களில் தினசரி சராசரியாக 600 - 800 பேருக்கு உணவு தருகிறோம்.
முகூர்த்த நாட்களில் தினசரி 3,000 முதல் 5,000 பேருக்கு உணவு வழங்குகிறோம். கடந்த ஆண்டு மட்டும் மூன்று லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறோம்” என்கிறார். இந்த அமைப்பு, கோவையில் டவுன் ஹால், ஆர்.எஸ்.புரம், ஹோப்ஸ் கல்லூரி, சேலத்தில் புதிய பஸ் நிலையம், வின்சென்ட் ஆகிய இடங்களில் குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்திருக்கிறது.
தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இதே பணிகளைச் செய்துவருகிறார் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஜின்னா. ‘ஹலால் இந்தியா’ அமைப்பின் நிறுவனரான இவர் தற்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். இவர் சிங்கப்பூர், கம்போடியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் முக்கிய உணவகங்களின் முன்பாக குளிர்ப்பதனப் பெட்டிகளை வைத்திருக்கிறார். புதுச்சேரி மிஷன் தெரு மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரிலும் இவரது ஏற்பாட்டில் குளிர்ப்பதனப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
“உணவகங்களில் சாப்பிட வருவோர் இதனைப் பார்த்து கூடுதலாக ஒரு உணவுப் பொட்டலம் வாங்கி குளிர்ப்பதனப் பெட்டியில் வைக்கிறார்கள். வண்டலூரில் ஒரு கல்வி நிறுவனத்தின் வாசலில் இதனை வைத்திருக்கிறோம். அங்கு கேன்டீனில் மீதமாகும் உணவு குளிர்ப்பதனப்பெட்டியில் வைக்கப்படுகிறது.
இதனை கண்காணித்து முறைப்படுத்த தன்னார்வலர்களும் இருக்கிறார்கள். சென்னையில் குளிர்ப்பதனப் பெட்டி வைக்க 280 உணவகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.” என்கிறார் ஜின்னா.
சமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் டென்னிஸ் கிளப் சாலையில் ஈஸா ஃபாத்திமா ஜாஸ்மின் என்கிற பல் மருத்துவர் சுமார் ரூ. 50 ஆயிரம் செலவில் ‘ஐயமிட்டு உண்’ என்கிற பெயரில் குளிர்ப்பதனப் பெட்டியுடன் கூடிய சிறு மையத்தை நிறுவியிருக்கிறார். இந்த மையத்தில் தினசரி வீட்டில் தயாராகும் உணவு பொருட்கள் மற்றும் காய்கனிகள், பிஸ்கெட்டுகள், பிரட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை சேகரமாகின்றன. இவைகளைக் கொண்டு சென்னையிலும் பலருக்கு பசியாற்றுகிறார்கள்.
தொடரட்டும் இவர்களின் சேவை.. குளிரட்டும் இல்லாதோரின் வயிறு!