"அம்மாவுக்காக அமைச்சர்கள் ,கட்சிக்காரர்கள் காத்திருந்தது போக இப்ப அமைச்சர்கள் , நிர்வாகிகளுக்காக அம்மா நினைவிடம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எல்லாம் நேரம்" என்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த அதிமுக தொண்டர்கள் சிலர் சலித்துக்கொண்டனர்.
தமிழக அரசியல்வாதிகளில் கண்டிப்புக்கு பெயர் போனவர் ஜெயலலிதா. மற்ற கட்சிகளில் இல்லாத ஒரு நிலை ஜெயலலிதா தலைமையிலான கட்சியில் இருந்தது. அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆரிடம் கட்சி நிர்வாகிகள் அமைச்சர்கள் ஒருவித அபிமானத்துடன் கூடிய மரியாதையுடன் பழகுவார்கள். எந்தப் பிரச்சனை என்றாலும் எம்.ஜி.ஆருடன் நேரடியாக விவாதத்தில் ஈடுபடுவார்கள். எம்.ஜி.ஆருடன் மேடையில் சரிக்கு சமமாக அமர்வார்கள்.
ஆனால் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பிறகு எல்லாமே மாறிப்போனது. ஒருவித பயம் கலந்த பக்தியுடன்தான் அமைச்சர்கள்,கட்சி நிர்வாகிகள் அவரை அணுகுவார்கள். காலில் விழும் காட்சிகளும் அரங்கேறியது. ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரைப் பார்த்து வானை நோக்கி கும்பிட்ட காட்சிகள் கூட அரங்கேறிய காலம் உண்டு.
ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு வருவதற்கு பல மணி நேரம் முன்னரே அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை வந்து காத்துக்கிடப்பதும் அவர் வந்த பிறகு சில கண்ணசைவுகளிலேயே சொல்லி வைத்தார்போல் கூட்டம் நடந்து முடிந்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய நிலை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வரும் வரை ஜெயலலிதா நினைவிடம் காத்துக்கிடக்கும் நிலை உள்ளதே என அதிமுக தொண்டர்கள் சிலர் சலித்துக்கொண்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பி.எஸ், எடப்பாடி இருவரும் கூட்டாக ஜெயலலிதா சமாதிக்கு வர உள்ளதாக திடீரென அறிவித்து மலர்களால் நினைவிடத்தை அலங்கரித்து வைத்திருந்தனர். ஆனால் கடைசி வரை யாரும் வரவில்லை.
இன்றும், மதியம் இரண்டு மணிக்கு வருவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தொண்டர் ஒருவர், "ஒருகாலத்தில் இவர்கள் காத்திருந்த காலம் போய் அம்மா நினைவிடம் இவர்களுக்காக காத்திருக்கும் நிலை என்று" சலித்துகொண்டார்.