மற்றவை

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 845 பேர் போட்டி- அதிகபட்சமாக தென் சென்னையில் 42 பேர்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 39 தொகுதிகளுக்கு மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக தென்சென்னையில் 42 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.

மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த 7-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.

கடைசிகட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடக்கிறது. தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6-வது கட்டமாக வரும் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி முடிவடைந்தது. 39 தொகுதிகளிலும் 1,261 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை, கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது நீலகிரி தொகுதியில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் வேட்பாளர்கள், சிதம்பரத்தில் பாமக வேட்பாளர் மற்றும் பல்வேறு இடங்களில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 355 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதன்கிழமை பிற்பகல் 3 மணியுடன் வாபஸ் பெறுவற்கான நேரம் முடிவடைந்தது. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 906 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 61 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 845 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் 789 பேர் ஆண்கள், 55 பேர் பெண்கள், ஒருவர் இதர பிரிவைச் சேர்ந்தவர் (திருநங்கை) ஆவார்.

இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

இறுதி வேட்பாளர் பட்டியலில் அதிகபட்சமாக தென்சென்னை தொகுதியில் 42 பேரும் குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 9 பேரும் போட்டியிடுகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதைவிட இப்போது 21 பேர் அதிகமாக போட்டியிடுகின்றனர். புதுச்சேரி தொகுதியில் 30 பேர் போட்டியிடுகின்றனர்.

ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 23 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியலில் 2 பெண்கள் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.

SCROLL FOR NEXT