மற்றவை

வடசென்னையில் சாலை வசதி இல்லை: மார்க்சிஸ்ட் வேட்பாளர் புகார்

செய்திப்பிரிவு

வடசென்னையில் சாலை வசதி இல்லை. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருகிறது என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் உ.வாசுகி பிரச்சாரம் செய்தார்.

வடசென்னை நாடாளுமன்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகி வடசென்னை ராயபுரம், காசிமேடு, தண்டையார்பேட்டை, பழைய வண் ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது:

வடசென்னையில் சாலை வசதி இல்லை. மின் தட்டுப்பாடு நிலவுகிறது. வாரத்திற்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் கழிவுநீர் வந்துவிடுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை கவுன்சிலர்கள் உள்ளிட்ட யாரும் சரிசெய்யவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. நாட்டை ஆட்சி செய்த பாஜகவும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுகவும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றாலும் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என நினைத்து வாக்கு சேகரிக்க வருகிறார்கள். மக்கள் கோபப் பட்டால், கொதித்து எழுந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டும்.

நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். அப்புறம் ஏன் கூட்டணிக்கு வருமாறு மதிமுக, தேமுதிகவை அழைத்தீர்கள். மோடி அலையிலேயே வெற்றி பெறலாமே. பெரியாரையும், நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு விஜயகாந்த் பேசுகிறார். சமூக நீதிக்காக போராடியவர் பெரியார். சமூகத்திற்கு அநீதி செய்பவர் நரேந்திர மோடி. எனவே, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT