ஜி.கே.நாகராஜ் - கொங்குநாடு ஜனநாயகக் கட்சித் தலைவர், மற்றும் கோவை மண்டல ரயில்வே போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்:
இருகூர், சிங்காநல்லூர் - வெள்ளலூர், இ.எஸ்.ஐ - ஏர்போர்ட், ஒண்டிப்புதூர் - ஏர்போர்ட், விளாங்குறிச்சி, பீளமேடு, ஆவாரம்பாளையம், டெக்ஸ்டூல் கணபதி, நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி, ரத்தினபுரி - சங்கனூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் மொத்தம் 13 ரயில்வே மேம்பாலத் திட்டங்கள் கோவையில் நடந்துவருகிறது. அதில் ஒன்றிரண்டைத் தவிர, மீதி முடிந்தபாடில்லை. 10-க்கும் மேற்பட்ட பாலங்கள் வேலையே ஆரம்பிக்கவில்லை.
இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருக்கிறது. சிங்காநல்லூரிலிருந்து பீளமேடு விமான நிலையத்துக்கு ஐந்து நிமிடத்தில் சென்றுவிடலாம். ஆனால், இப்போதோ 2 மணி நேரமாகிறது. மேம்பாலப் பணிகளுக்கு ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தும் பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்திக் கொடுக்கவில்லை. இதுவே மேம்பாலப் பணிகள் நிறைவேறாமல் இருக்க முக்கியக் காரணம். மேம்பாலப் பணிகள் தொடங்கிவிட்ட சில இடங்களில், மாற்றுத் தடங்களும் ஒதுக்கப்படவில்லை. இதனால், மொத்த நகரமும் ஸ்தம்பித்துப்போகிறது. மேம்பாலப் பணிகள் நிறைவடையாமல் நகரின் வளர்ச்சி என்பது கேள்விக்குறிதான்.