தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார் என நாமக்கல்லில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் பேசினார்.
நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து சரத்குமார் பேசியது: மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரத்தை, மாநில அரசுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் 170 வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அவற்றில் 150 நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக வர முதல்வர் பாடுபட்டு வருகிறார். 2025-ல் இந்தியாவில் அதிக இளைஞர்கள் இருப்பர். அவர்களை வழி நடத்த முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.
பல்வேறு கூட்டணி கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. அக்கூட்டணிக் கட்சிகள் ஆதாயம் பெறுவதற்காக போட்டியிடுகின்றன. திமுக, காங்கிரஸுடன் பதவி சுகத்துக்காக கூட்டணியில் இருந்தது.
ஆனால், தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அலை வீசுகிறது என்கிற பேரில் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்துள்ளார். அவர் என்ன பேசுகிறார் என்பது புரியவில்லை. அந்த கூட்டணி சுயநல, சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இவ்வாறு சரத்குமார் பேசினார்.