இதர மாநிலங்கள்

ஆம் ஆத்மி பெண் தலைவரின் சர்ச்சைப் பேச்சு: கேஜ்ரிவால் சமாளிப்பு

செய்திப்பிரிவு

முஸ்லிம்களிடையே மதரீதியான தூண்டுதளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்படும் ஆம் ஆத்மி பெண் தலைவர் ஷாசியா இல்மியின் பேச்சில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷாசியா இல்மி, சில தினங்களுக்கு முன் மும்பையில் இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, 'முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு இருக்காமல் மதச்சார்புடையவர்களாக மாறவேண்டும். அவர்கள் தங்களது நிலையிலிருந்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதை தவிர்த்து தங்களது சமூகத்திற்காக வாக்களிக்க வேண்டும்' என்று பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "ஷாசியா இல்மி பேச்சு முன்னோக்கம் இல்லாதது. இது அவரது தனிப்பட்ட கருத்தே. தனிப்பட்ட முறையில் அவர் சமூக தலைவர்களிடையே நடத்திய பேச்சு வெளியானதால்தான் இந்த பிரச்சினை.

அவர் தனது வார்த்தைகளை தான் தவறுதலாக பயன்படுத்தி உள்ளார். மேலும், அது சமூகத்தினர் இடையே நடந்த சாதாரண உரையாடல்தானே தவிர, மத ரீதியான தூண்டுதல் அல்ல" என்று கூறினார்.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் ஷாசியா இல்மி போட்டியிடுவது குறிப்பிட்டத்தக்கது.

SCROLL FOR NEXT