கே.வி.கண்ணன் - டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர், காட்டுமன்னார்கோயில்:
வீராணம் ஏரியிலிருந்து இந்தப் பகுதியின் விவசாயத்துக்கும் சென்னையின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் செல்கிறது. ஆனாலும், கடந்த, 35 ஆண்டுகளாக ஏரி தூர் வாரப்படவில்லை. இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு கணக்கே இல்லை. இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதற்குக் காரணம். இந்த ஏரியைத் தூர் வாரியிருந்தால் இந்தப் பகுதியில் இரண்டு போகம் விளைச்சல் கிடைக்கும். டெல்டா பாசனத்தை நம்பித்தான் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் விவசாயிகள் உள்ளனர். ஆனால், டெல்டா பாசனத்தில் பயனடையும் தஞ்சாவூர், திருவாரூர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. கொள்ளிடம் ஆற்றிலிருந்து கிடைக்கவேண்டிய நீர் பங்கீடும் முறையாகக் கிடைப்பதில்லை. கொள்ளிடம் ஆற்று நீரைச் சேமிக்க போதிய கதவணைகள் இல்லை. இதனால், மழைக் காலத்தில் அதிக அளவு தண்ணீர் கடலில் கலக்கிறது.