என். சிவநேசன் - தலைவர், ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு:
கொங்கு மண்டலத்தில் மட்டும் ஜவுளிகள் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. தவிர, ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதிக்கான ஜவுளிகள் இங்கு பதப்படுத்தப்படுகின்றன. இதனால், கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் 1,570 சாயச் சலவைப் பதனிடும் ஆலைகள் செயல்பட்டன. ஆனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால், தற்போது 328 ஆலைகள் மட்டுமே இயங்குகின்றன.
அவையும் இதர மாநிலங்களுடனான தொழில்போட்டியைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகின்றன. சுமார் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், நான்கு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கொடுத்துவந்த இந்தத் தொழில், இன்று தடுமாறி நிற்கின்றது.
சாயக் கழிவுகளைப் பூஜ்ய முறை சுத்திகரிப்பு செய்வதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும். ஒரு லட்சம் லிட்டர் நீரைச் சுத்திகரிக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் கலன்களை நிறுவ வேண்டும். கழிவுநீரை ஆவியாக்க, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் தினமும் 1,500 டன் விறகு பயன்படுத்தப்படுகிறது. இதனால், வன வளம் அழிகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கப் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கடலில் விட வேண்டும். இதைச் செயல்படுத்த ரூ. 1,500 கோடி தேவை. அரசுதான் இதைச் செயல்படுத்த வேண்டும். குஜராத்தில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.