எம். நல்லுசாமி - பெரம்பலூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கச் செயலாளர்:
சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் நிலம் கையகப்படுத்தலோடு முடங்கிக்கிடக்கிறது. சிறு, குறு தொழிலுக்கான சிட்கோ தொழிற்பேட்டை 90% பணிகள் முடிந்தும் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுத்துறை தொழில் நிறுவனங்களின் வருகையாக பாரத மிகு மின் நிறுவனத்தின் ஓர் அலகு இந்தப் பகுதியில் வேண்டும் என்ற கோரிக்கையும் புறக்கணிக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டால், ரயில் பாதை போன்ற எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். தொகுதியும் பொருளாதார வளர்ச்சி பெறும்.
ரமேஷ் கருப்பையா - சூழலியல் செயற்பாட்டாளர்:
காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள் தவிர்த்து, தொகுதியின் இதர பகுதிகள் வறண்டு வருகின்றன. குறிப்பாக, பெரம்பலூர் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் மேற்கொண்ட ஆய்வுகளில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கான நீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்குத் திட்டங்கள் எதுவும் இங்கு இல்லை. வறட்சி காரணமாக விவசாயிகள் விதை வெங்காயம் மற்றும் கறவை மாடுகளை விற்பது அதிகமாகிவிட்டது.