பொங்கலூர் நா.பழனிசாமி - முன்னாள் அமைச்சர், தி.மு.க:
ஜவாஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தில் 12,500 குடிசை வீடுகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டித்தர 4,500 பேருக்கு ஏற்பாடு செய்தோம். அதில் 48 வீடுகள் சாய்ந்துவிட்டன என்பதற்காக, சாயாத கட்டிடங்களின் ஐந்து மாடிகளில் இரண்டு மாடிகளை இடித்து 1,500 வீடுகளைச் சேதமாக்கிவிட்டனர். எம்.பி-யான நடராஜனுக்குச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
சி.பி.ராதாகிருஷ்ணன் - முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவர்:
பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், நகை தயாரிப்பு இவையே கோவையின் முக்கியத் தொழில்கள். நான் இங்கு எம்.பி-யாக இருக்கும்போது நகைத் தொழிலுக்காக தொழிற்பூங்கா அமைக்க முயற்சித்தேன். அதேபோல், தகவல் தொழில்நுட்பப் பூங்கா கொண்டு வர முயன்றோம். ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் இரண்டையுமே தடுத்துவிட்டனர். தங்க நாற்கரச் சாலை அனைத்து நகரங்களிலும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கோவையில் மட்டும் அரைகுறையாகக் கிடக்கிறது.