சிவகுமார் - வழிகாட்டி சங்கப் பிரமுகர்:
சேலம் மாநகராட்சியில் 8.20 லட்சம் பேர் உட்பட, மாவட்டத்தில் 32 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் நகரச் சாலைகளில் 61% இருசக்கர வாகனங்களும், 13% கார்களும், 8% ஆட்டோக்களும், தலா 4% சிறு ரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளும், 10% வணிக வாகனங்களும் இயங்குகின்றன. சேலம் மாநகரில் 1.62 லட்சம் வாகனங்கள் உள்ள நிலையில், நகரில் தினமும் 1.12 லட்சம் வாகனங்கள் வந்துசெல்வதாக ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இவை எல்லாமே இரட்டிப்பாகிவிடும். எனவே, அப்போது மெட்ரோ ரயில்பற்றி யோசிப்பதைவிட இப்போதே திட்டமிடுவது புத்திசாலித்தனம்.
இந்திய ரயில்வே துறை பல்வேறு மாநிலங்களில் உள்ள 72 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இதில் சேலம், கோவை உள்ளிட்ட வளர்ந்துவரும் நகரங்களையும் இணைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் 120 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில், 18 முதல் 20 அடி உயரத்தில் தூண் அமைத்து, மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தலாம். இதற்காக சுமார் 1,000 கோடி ரூபாய் செலவாகும்.