வாக்காளர்களுக்கு பணம் கொடுப்போரைப் பிடித்துக் கொடுக்க, தேர்தல் ஆணையத்தின் உளவாளிகள்போல பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் செயல்பட முன்வர வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
வேட்பாளர்கள் இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்துக்குப் பிறகு பிரச்சாரம் செய்ய வேட்பாளர் நினைத்தால், அவர் தனியாகத்தான் செல்ல வேண்டும். நள்ளிரவில் கதவைத் தட்டி பொதுமக்களுக்கு தொல்லை தரக்கூடாது.
அப்படி யாரேனும் பாதிக்கப்பட்டு புகார் செய்தால், அத்துமீறி நுழைதல், மிரட்டல் போன்ற பிரிவுகளின்கீழ் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்புண்டு. யாராவது ஒருவர் தனது வீட்டுக்கு வேட்பாளரை அழைத்தால் அப்போது தனியாகச் சென்று இரவில் வாக்கு கேட்கலாம். வழியில் எதிரே வருவோரிடம் வாக்கு கேட்கலாம். விதியை மீறாத வகையிலும், வழக்கில் சிக்காதபடியும் வேட்பாளர்கள் சொந்த ரிஸ்கில் இரவுப் பிரச்சாரம் மேற்கொள்ளலாம். இதற்கு மேல் இப்பிரச்சினையில் பதில் சொல்ல விரும்பவில்லை. கடந்த 2 நாட்களாக இதுபற்றி போனில் விளக்கம் அளிப்பதே வேலையாகிப்போனது.
உளவாளிகள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால், அதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுக்கும் உளவாளிகள்போல் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் செயல்படவேண்டும். தன்னார்வலர்களாக அவர்களே முன்வந்து புகார் அளிக்க வேண்டும். ஓட்டுக்குப் பணம் வாங்குவது தவறு என்று உள்ளூர்வாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வேட்பாளர்கள் பணம் கொடுத்தால் அதுபற்றி பொதுமக்கள் எங்களுக்கு ரகசியமாக தகவல் தரலாம். உடனடியாக அங்கு வந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏற்கெனவே 80 சதவீத பகுதிகளில் கிராம கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியலில் மாஜி அதிகாரிகள்
முன்னாள் குடிமைப்பணி அதிகாரிகள், அரசியலில் சேருவது நல்லதா என்று கேட்கிறீர்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவர்கள் சாதாரணமானவர்களாக ஆகிவிடுகின்றனர். வடமாநிலத்தில் முன்னாள் உள்துறைச் செயலாளர், முன்னாள் டிஜிபி போன்றோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
நான் ரொம்ப சாதாரணமானவன்
‘‘தலைவர்களின் பிரச்சாரத்தின்போது வேட்பாளர் பெயரைச் சொன்னால், அந்தக் கூட்டத்துக்கான செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற விதியை முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன’’ என்று பிரவீண்குமாரிடம் ஒரு நிருபர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர், ‘‘இது தேர்தல் ஆணையத்தின் பழைய விதி. அதைத்தான் சொன்னேன். மற்றபடி யாருடனும் மோதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ரொம்ப சாதாரணமானவன்’’ என்றார். தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரப் போவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே என்று கேட்டபோது, அது அவரது உரிமை என்றார்.