மற்றவை

தேர்தலில் தோற்றாலும் லட்சியத்தில் வெல்வேன்: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் பேட்டி

கரு.முத்து

பண பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு நடத்தப்படும் தேர்தலில் கொள்கைகளை மட்டும் வைத்து போராடும் நான் தோற்றுவிடுவேன் என்பது தெரிந்தாலும் எங்கள் கொள்கைகளை லட்சகணக்கான மக்களை நோக்கி சென்றடைய வைப்பதில் பெருவெற்றி கிடைக் கும் என்பதால் மகிழ்வோடு இருக் கிறேன் என்கிறார் மயிலாடுதுறை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் என்.குணசேகரன்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் இவர், மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதில் தீவிர செயல்பாட்டாளர். தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண் டிருந்தவரை “தி இந்து”வுக்காக சந்தித்து உரையாடினோம்.

தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பது எதற்காக?

இந்த பகுதி மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் போட்டியிடுகிறேன். மிகப்பெரிய அபாயத்தை இந்த பகுதி தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. மணிசங்கர் அய்யர் முதன்முதலாக இங்கு போட்டியிட்டபோது மயிலாடுதுறை தொகுதியை துபாயாக்குவேன் என்று ஒரு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி 100 சதவீதம் நிறை வேறி விட்டது.

அவரால் கொண்டு வரப்பட்ட இறால் பண்ணைகளால் விவசாய வளம் குறைந்துபோன நிலையில் அடுத்ததாக உள்ளே வந்தது அனல்மின் நிலையங்கள். அதற்கு அடுத்ததாக தற்போது மீத்தேன் திட்டம். இவற்றால் டெல்டா, பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது.

இவற்றுக்கும் நீங்கள் தேர்தலில் நிற்பதற்கும் என்ன தொடர்பு?

நாகை மாவட்டத்தில் மட்டும் 12 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனல்மின் நிலையங்கள் மட்டும் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டால் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் இரண்டுமே மாவட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடும். உதாரணமாக 1,70,000 ஏக்கர் விவசாய நிலம் இதற்காகக் கையகப்படுத்தப்படுகிறது.

தலா இரண்டு கி.மீ. கடற்கரைப் பகுதி இதற்காக ஆக்கிரமிக்கப்படுகிறது. அப்படியென்றால் அதனால் வெளியேறும் விவசாயிகள், மீனவர்கள் நிலைமை என்ன வாகும்?

அதுமட்டுமில்லாமல் புவி வெப்பமயமாதல் பிரச்சினை உலகை அச்சுறுத்திக் கொண்டி ருக்கும் இந்த காலகட்டத்தில் இத்தனை அனல்மின் நிலையங்களும் கரியை எரிக்கத் தொடங்கினால் இப்பகுதியின் தட்பவெப்ப நிலையும் தாறுமாறாக உயரத் தொடங்கும்.

ஏற்கெனவே போதிய மழை இல்லாமல் தவிக்கும் நிலையில் இதுவும் சேர்ந்து கொண்டால் அதனால் ஏற்படும் விளைவை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

இதனை எதிர்த்துதான் அனல்மின் நிலைய எதிர்ப்பு கூட்டணியின் அமைப்பாளராக வும், காவிரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளராகவும் இருக்கும் நான் தொடர்ந்து இப்பகுதியில் போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

அப்போதெல்லாம் அதிக அளவில் மக்களைச் சந்திக்க முடிவதில்லை. ஆனால் தேர்தலில் போட்டி என்கிறபோது ஒவ்வொரு ஊருக்கும் போய் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களிடம் இந்த பாதிப்புகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்திட முடிகிறது.

மீத்தேன் திட்டம் பற்றிய உங்கள் நிலை என்ன?

ஏற்கெனவே காவிரியில் நீர்வரத்து இல்லாததால் குலைந்து போன விவசாயம், மீத்தேன் திட்டத்துக்காக பல நூறு அடி ஆழத்துக்கு தோண்டி, குழாய்கள் பதிக்கப்பட்டால் நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குப் போய் விடும். அதன்மூலம் முற்றிலுமாக விவசாயம் அழிக்கப்பட்டுவிடும்.

ஒரு நிபுணர் குழு அமைத்து இதை ஆராய்ந்து மூன்று மாதங் களில் அறிக்கை பெறப்படும் என்று ஜெயலலிதா சொல்லி ஓராண்டு ஆகியும் அறிக்கை எதுவும் பெறப்பட்டதாக தெரிய வில்லை.

இதையெல்லாம் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க எனக்கு இந்த தேர்தல் களம் மிக அருமையான வாய்ப்பை கொடுத்திருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எங்கள் இயக்கம் தீவிர களப்பணியாற்றிக் கொண்டிருக் கிறது” என்றார்.

SCROLL FOR NEXT