'தமிழர்கள் வாழ்வதற்கு ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும்' என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
"எம்.ஜி.ஆர். வழியில் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் கட்சி அ.தி.மு.க. தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸையும், தி.மு.கவை வீழ்த்த வலிமையான கட்சி அ.தி.மு.கதான். எனவே தான் அ.தி.மு.கவை ஆதரிக்கிறோம்.
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி மானபங்கப்படுத்த ப்பட்டாள் என்றவுடனே எத்தனை போராட்டம், எதிர்ப்புகள். ஆனால், ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்திய போதெல்லாம், கருணாநிதி அரசு எங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது.
சட்டப்பேரவை தேர்தலின் போது அ.தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்தோம். அப்போது வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவிடம் `இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, ராஜபட்சே போர்க்குற்றவாளி என அறிவிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று, 8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலிலதா தானே முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினார்.
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க, முதல்வரிடம் முறையிட்டோம். `தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். உச்சநீதி மன்றத்திலும் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டது. அவர்களை விடுதலை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனி ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்புதான் தீர்வு. இதனை வலியுறுத்திய கட்சி அ.தி.மு.க. மட்டும்தான். இலங்கை தமிழர் படுகொலை, மீனவர்கள் படுகொலை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, காவிரி தண்ணீர் பிரச்சினை, இவை அனைத்துக்கும் காரணம் காங்கிரஸும், தி.மு.க.வும். இந்த வரிசையில்தான் பா.ஜ.க.வும் இருக்கிறது. தே.மு.தி.க தலைவர் தன்மானத்தை இழந்து பணத்துக்காக அக் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த நாட்டின் அனைத்து கஷ்டங்களுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் சொந்தக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள். தமிழ் இனத்தை கருவறுத்தது காங்கிரஸ், இதை வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. நமது இனம் விடுதலை காக்க இரட்டை இலையை பயன்படுத்திக் கொள்வோம்" என்றார் சீமான்.