மற்றவை

திமுகவில் இருந்து வைகோ வெளியேறக் காரணம் என்ன?- கம்பத்தில் மு.க. அழகிரி பரபரப்பு பேச்சு

செய்திப்பிரிவு

“திமுகவிலிருந்து வைகோ வெளியேற, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் தான் காரணம்” என கம்பத்தில் புதன் கிழமை தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் மு.க. அழகிரி தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

வைகோ, தேனி தொகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் அவர் ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளார். அதை நம்பி, ம.தி.மு.க. இத்தொகுதியில் போட்டியிடுகிறது. அதுபோல, ஜே.எம். ஆரூண் எம்.பி-யும் 2 முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக் கப்பட்டு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். அதனால், அவரும் மீண்டும் நிற்கிறார்.

ஆனால், திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் எதற்காக இந்தத் தொகுதியில் நிற்கிறார்? அவருக்கு என்ன தகுதி உள்ளது? அவரது ஒரே தகுதி, சாதனை கட்சி விட்டு கட்சி தாவுவதுதான். ம.தி.மு.க-வில் இருந்த அவரை மீண்டும் தி.மு.க-வுக்கு கொண்டு வந்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

வைகோ தி.மு.க-வை விட்டு வெளியேற முக்கியக் காரணம் இந்த பொன்.முத்துராமலிங்கம்தான். அவரை ஏற்றிவிட்டு ஏற்றி விட்டே, தனிக்கட்சி (ம.தி.மு.க) தொடங்க வைத்தார். பிறகு அவருக்கும் துரோகம் செய்துவிட்டு தி.மு.க. வுக்கு வந்துவிட்டார் என்றார்.

விழாவில் அழகிரி நாலுனு சொன்னது, மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வை நான்காவது இடத்துக்கு தள்ள வேலை பாருங்கள் என தனது ஆதரவாளர்களுக்கு சூசகமாக கட்டளையிட்டதாகக் கூறப் படுகிறது. தேனி ம.தி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரம், காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் ஆகியோர் விழாவில் மு.க. அழகிரியை சந்தித்தனர். அவர்களுக்கு அழகிரி வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT